திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தநிலையில் நாடு முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுவாமியின் மகிமை புரியும் வகையில் சிறிய அளவிலான புத்தகம் அச்சிட்டு பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் மதப் பிரச்சாரத்தை தடுக்க முடியும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் மத மாற்றங்களைத் தடுக்க இந்து மதப் பிரச்சாரத்தை சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்குவது போன்று புத்தக பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இதில் ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேஸ்வர சுப்ரபாதம், பஜகோவிந்தம், லலிதா சஹஸ்ரநாமம், சிவ ஸ்தோத்திரம், பகவத் கீதை மற்றும் பிற இந்து கடவுள்கள் மற்றும் இதிகாசங்கள் தொடர்பான மத புத்தகங்களை அச்சிட்டு மாநிலம் முழுவதும் உள்ள மதமாற்றம் செய்யப்படும் கிராமங்களில் அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர். நாயுடு அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் ஸ்டாலினுக்கு இது தெரியாதா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!!

இந்த மத புத்தகங்கள் பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரச்சார பரிஷத் மூலம் சிறிய அளவில் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்றும், திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு ஏழுமலையானின் புத்தகம் பிரசாதமாகவும் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.

திருமலையில் சாமி தரிசனத்திற்காக வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வரிசையில் உள்ள காத்திருக்கும் பக்தர்களுக்கு இதுபோன்ற மத புத்தகம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அவற்றை முழுமையாகப் படித்து பக்தர்களிடையே ஆன்மீகத்தை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறினார். இதற்காக தேவஸ்தானத்தின் நிதியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி கோடிக்கணக்கான புத்தகங்களை அச்சிடுவதற்கான செலவை ஈடுகட்ட பல நன்கொடையாளர்கள் முன்வந்துள்ளதாகவும், அவர்களின் ஒத்துழைப்புடன், இந்த புத்தகம் அச்சிட்டு தர்ம பிரச்சார பரிஷத் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்க ஒரு பெரிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!