வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எச்சரித்துள்ளது.
இலவசத் தரிசனத்திற்கான (சர்வ தரிசனம்) நேரடி அனுமதி நாளை காலை தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் இன்று இரவு முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இரவு 8 மணி நிலவரப்படி, தரிசன வரிசையானது சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி நீண்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யவும் தேவஸ்தானம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், தரிசனத்திற்காகக் காத்திருக்கும் நேரம் ஒரு நாளைத் தாண்டும் என்பதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் நிலமையை உணர்ந்து திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி தினங்களில் விஐபி மற்றும் ஆன்லைன் டோக்கன் தரிசனங்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை முதல் பொதுமக்கள் நேரடியாக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் ‘சர்வ தரிசன’ முறை தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வரத் தொடங்கியதால், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இரவு 8 மணி நிலவரப்படி, வரிசையானது அறைகளைக் கடந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வெளியே நீண்டது.
இதையும் படிங்க: மிரள வைக்கும் உண்டியல் காணிக்கை! ஏழுமலையான் சந்நிதியில் குவிந்த பக்தர்கள்! நாளை முதல் இலவச தரிசனம்!
பக்தர்களின் இந்த அதீத வருகையால், தற்போது வரிசையில் இணையும் ஒரு பக்தர் சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வெளியே வருவதற்குச் சரியாக 24 மணி நேரம் ஆகும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் கணித்துள்ளனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான பால், காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. “பக்தர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்; ஏ.ஐ. தொழில்நுட்பத் திரைகள் மூலம் அவ்வப்போது அறிவிக்கப்படும் காத்திருப்பு நேரத்தைக் கவனித்து வரிசையில் இணைய வேண்டும்” எனத் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் திருமலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளை காலை சொர்க்கவாசல் தரிசனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் போது, இந்தத் திரைக்கடல் போன்ற கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கூடுதலாக 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் 8-ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்பதால், பக்தர்கள் அவசரப்படாமல் நிதானமாக வந்து தரிசனம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!