திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருமலையில்
அறைகள் பெற எங்கே செல்ல வேண்டும்? இலவச லாக்கர்களை எங்கே பெறலாம் ? மொட்டையடிக்கும் கல்யாண கட்டாவிற்கு எங்கே எப்படி செல்ல வேண்டும்? அன்னபிரசாத மையத்திற்கு எப்படிச் செல்வது? சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு எப்படிச் செல்வது? இலவச பேருந்துகள் நிறுத்தம் ? என திருமலைக்கு வரும் பக்தர்களின் மனதில் எழும் பல கேள்விகளுக்கு வழிக்காட்டியாக அமையும் வகையில்
வெங்கடாத்திரி மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த செயலி மூலம் திருமலையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களையும் வசதிகளையும் பக்தர்கள் எளிதாகச் சென்றடையும் வகையில், இந்தச் செயலி சரியான வழியைக் (இருப்பிடத்தை) காண்பிக்கும்.
குறிப்பாக சாமி தரிசனத்திற்கான பல்வேறு தரிசன வரிசை நுழைவு வாயில்கள் உள்ளதால் சரியாக எந்த வரிசைக்கு செல்ல வேண்டும் என்பதை காண்பிக்கும். மேலும் இலவச பேருந்துகளின் வழித்தடங்கள், பஸ் நிறுத்தம் மற்றும் நேரங்கள், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடம், மற்ற உணவு வசதிகள், குடிநீர் மையங்கள், கழிப்பறைகள், காவல் உதவி மையங்கள், காவல் நிலையம், தங்குமிட கவுண்டர்கள், செருப்புகள், உடமைகள் , மொபைல் டெபாசிட் மையங்கள் எல்லாவற்றிற்கும் உண்டான இடத்தை தேர்வு செய்து எளிதாக செல்ல இந்தச் செயலியைப் பக்தர்கள் பயன்படுத்தலாம்.
அவசரத்தில் நாம் நிறுத்திய வாகனத்தை எங்கே நிறுத்தினோம் என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். அல்லது நாம் உறவினர்களை ஒரு பகுதியில் விட்டுவிட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் செயலியில் உள்ள 'என் இடத்தைக் குறித்து வை' ( பின் டூ அவர் லோகேஷன் ) அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க: திருப்பதி செல்ல திட்டமா? டிசம்பர் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தேதிகள் அறிவிப்பு! பக்தர்கள் தவறவிடக்கூடாத முக்கிய தகவல்கள்!
இந்த அம்சத்தின் மூலம் பக்தர்கள் இருக்கும் இடத்தையோ அல்லது வாகனத்தை நிறுத்திய இடத்தையோ சேமித்து வைத்தால் வேலை முடிந்த பிறகு மீண்டும் எளிதாக அந்த இடத்தை அடையலாம். திருமலையில் சிக்னல் பிரச்சனைகள் இருந்தாலும் அல்லது பக்தர்களின் மொபைல்களில் இணைய சேவை இல்லாவிட்டாலும் இந்தச் செயலி ஆஃப்லைனில் தடையின்றி செயல்படும். இதற்காக தேவஸ்தானம் பிரத்யேகமாக ஒரு ஆஃப்லைன் சேவை வசதியை உருவாக்கியுள்ளது.
பக்தர்களுக்கு 24 மணி நேரமும் இந்த செயலி சேவை செய்வதற்காக 'கோவிந்தா' என்ற குரல் உதவியாளர் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செயலியில் உள்ள மைக்கை அழுத்தி அருகில் குடிநீர் எங்கே இருக்கிறது?', ' தரிசன நேரத்திற்கான வரிசையில் சேர நான் எங்கே செல்ல வேண்டும்?' என்று பேசினால் போதும் பக்தர்கள் கேள்விக்கு ஏற்றது போல் வழியை காண்பிக்கும்.
மேலும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தாத பக்தர்களை கருத்தில் கொண்டு திருமலையின் முக்கிய சந்திப்புகளில் 20 ஸ்மார்ட் காட்சிப் பலகைகள் (கியோஸ்க்குகள்) நிறுவப்பட உள்ளது. இதில் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரைக் கூறும்போது வழிகாட்டுதல்களும் மற்ற விவரங்களும் அந்தப் ஸ்கீரினில் தோன்றும்.
இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் திருமலையில் நடைபெறவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் உடல்நலம் குன்றும் பக்தர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்வதற்காக, நான்கு முக்கிய வீதிகளிலும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளிலும் ஆம்புலன்ஸ்களும் மருத்துவப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எந்தவொரு சிக்கலையும் தவிர்ப்பதற்காக தேவஸ்தான தகவல் தொழில்நுட்பத் துறை, ஐஐடி கான்பூருடன் இணைந்து ஆம்புலன்ஸ் கண்காணிப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆம்புலன்ஸின் இருப்பிடம் டிரைவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தகவல்கள் இந்தச் செயலியில் காட்டப்படும். ஓட்டுநரும் மருத்துவப் பணியாளர்களும் அந்த ஆம்புலன்ஸிலிருந்து 20 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்தால் அதுகுறித்து ஒரு எச்சரிக்கை அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரியால் அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள்.
அவசர காலங்களில் டிரைவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் இருப்பை உறுதி செய்வதற்காக கண்காணிக்கப்படுவார்கள். மருத்துவப் பணியாளர்களை ஒருங்கிணைப்பதற்காக தேவஸ்தானம் அஸ்வினி மருத்துவமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தச் செயலி என்.ஆர்.ஐ நன்கொடையாளரான ஜெயபிரகாஷ் குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை ஆப் ஸ்டோர்/பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கருட சேவையின்போது இது முழுமையாகக் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த செயலி தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகள் உட்பட ஐந்து மொழிகளில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதையும் படிங்க: கட்டுப்படுத்த முடியல... திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்... அக்.1,5 தேதிகளில் தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு...!