நீண்ட வார இறுதி விடுமுறையைக் கொண்டாட இமாச்சல பிரதேசத்திற்கு படையெடுத்த சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் போக்குவரத்து முடங்கியதால், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்களில் அறைகள் கிடைக்காததால், பலர் தங்கள் கார்களிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சில பயணிகளும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய இளைஞர்களிடையே நீண்ட வார இறுதி வந்தாலே சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் வார இறுதிகளில் கூட்டம் நிரம்புவது போல, வட இந்தியாவில் இமாச்சல பிரதேசம் பிரபலமான தேர்வாக உள்ளது. குளிர்ச்சியான வானிலை மற்றும் எளிதான போக்குவரத்து காரணமாக, மக்கள் இந்த மாநிலத்தை விரும்புகின்றனர். குறிப்பாக மணாலி உலகப் புகழ்பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கிறது. ஆனால், இந்த வாரம் மணாலி பகுதியில் திடீரென பனிப்பொழிவு அதிகரித்தது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நெரிசலை விட இது மிக மோசமானது; சில இடங்களில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் சாலையில் சிக்கியுள்ளனர். நீண்ட வறட்சிக்குப் பின் வந்த இந்த பனிப்பொழிவு, இமாச்சலின் குளிர்கால அழகை வெளிப்படுத்தினாலும், சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகை காரணமாக நெரிசல் தீவிரமடைந்தது. குல்லு மாவட்டத்தில் உள்ள மணாலி சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. கோத்தி முதல் மணாலி வரை 15 கிலோமீட்டர் தூரத்தில் போக்குவரத்து மணிக்கணக்கில் ஸ்தம்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பனிப்புயல்: உயர்ப்பகுதிகளில் வாழ்க்கை ஸ்தம்பிப்பு..!!
கடந்த மூன்று மாதங்களுக்குப் பின் வந்த இந்த பனிப்பொழிவு, நீண்ட வார இறுதி விடுமுறையுடன் சேர்ந்து நிலைமையை மோசமாக்கியது. மணாலி பகுதியில் உள்ள ஹோட்டல்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. இதனால் பயணிகள் அறைகளைத் தேடி அலைந்து வருகின்றனர். ஒருபுறம் சாலை நெரிசல், மறுபுறம் அறை பற்றாக்குறை என இரு தரப்பு சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.பலர் தங்கள் வாகனங்களிலேயே இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் குல்லு நகரத்திற்கு திரும்பிச் செல்ல நேர்ந்தது. டெல்லி, குருகிராம், சண்டிகர் போன்ற இடங்களில் இருந்து வந்த பயணிகளுக்கு சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் மட்டுமே மிஞ்சியது.
வட இந்தியா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து வந்த தம்பதிகள் மற்றும் குடும்பத்தினரும் இதில் சிக்கியுள்ளனர். அவர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பகிர்ந்து தங்கள் சிரமங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.மோசமான பனிப்பொழிவு காரணமாக மணாலி முடங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உறைபனியில் சிக்கித் தவிக்கின்றனர். இரண்டு அடி உயரத்திற்கு பனி பொழிந்ததால், முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இமாச்சல வரலாற்றில் இத்தகைய போக்குவரத்து பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பேசிய சுற்றுலாப் பயணிகள், "பல மணி நேரமாக சாலையில் நிற்கிறோம். ஹோட்டல்களில் அறைகள் இல்லை. இரவு முழுவதும் காரிலேயே தங்க வேண்டிய கட்டாயம். குழந்தைகளுடன் சிரமப்படுகிறோம். கழிப்பறை வசதி கூட இல்லை. பனிப்பொழிவுக்கு ஏற்ப அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்" என்று கூறினர்.

உணவு கிடைக்காததால், பிஸ்கட் மற்றும் சிப்ஸ் போன்றவை மட்டுமே சாப்பிட்டுள்ளனர். 24 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் மட்டும் குடித்து, தூக்கமின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். இமாச்சல் முழுவதும் பனிப்பொழிவால் 835 சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய மேற்குத் திசை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகின் நெரிசல் மிகுந்த நகரங்கள்: லிஸ்டில் பெங்களூரு.. எத்தனையாவது இடம் தெரியுமா..??