விஜயதசமி விழாவின் மகிழ்ச்சியை சோகமாக்கியுள்ளது மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரண்டு விபத்துகள். துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வின்போது, உஜ்ஜைன் மற்றும் காண்ட்வா மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
துர்கா பூஜை என்பது வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழா. அன்னை துர்கா, அசுரன் மகிஷாசுரனை வென்று தீமையை அழித்ததை சிறப்பிக்கும் இந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் துர்கா தேவி தனது குழந்தைகளுடன் பூமிக்கு வந்து, மீண்டும் சிவபெருமானின் இல்லமான கைலாசத்திற்கு திரும்புவதாக நம்பப்படுகிறது.
இதை குறிக்கும் வகையில், அழகிய சிலைகள் இசை, நடனம், ஊர்வலங்களுடன் ஆறுகள், குளங்கள் அல்லது கடல்களில் கரைக்கப்படுகின்றன. மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது பக்தி பாரம்பரியத்துடன் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: ராட்சத பலூனில் பற்றிய நெருப்பு!! அலறிய மக்கள்! நூலிழையில் உயிர் தப்பிய ம.பி முதல்வர்!!
உஜ்ஜைன் மாவட்டம் இங்கோரியா பகுதியில், துர்கா சிலையுடன் பக்தர்கள் பலர் டிராக்டர்-டிராலியில் சென்றனர். அப்போது சம்பல் ஆற்றின் மீது உள்ள பாலத்தின் தடுப்புகளை உடைத்து, டிராக்டர் ஆற்றுக்குள் விழுந்தது. 12 வயது சிறுவன் தவறுதலாக டிராக்டரை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் 12 குழந்தைகள் உட்பட பலர் ஆற்றில் விழுந்தனர். கிராம மக்கள் உடனடியாக 11 குழந்தைகளை மீட்டனர், ஆனால் ஒரு குழந்தை காணாமல் போயுள்ளது. மீட்கப்பட்டவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய டிராக்டர் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளன.
காண்ட்வா மாவட்டம் பாந்தனா வட்டத்தில் உள்ள அர்ட்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த 25 பேர் துர்கா சிலையை கரைக்க டிராக்டரில் சென்றனர். அப்போது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இதில் 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; இவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர், அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது. டிராக்டரில் அதிகப்படியானோர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இந்த விபங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டு நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், குடும்பங்களுக்கு பலம் அளிக்கவும் துர்கா தேவியை வேண்டுகிறேன்,” என முதல்வர் கூறினார்.
இந்த விபங்கள், மத விழாக்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. மாநில அரசு விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவில் லேசான நிலநடுக்கங்கள்: பீதியில் மணிப்பூர், அருணாச்சல பிரதேச மக்கள்..!!