அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் வர்த்தக கொள்கை மற்றும் தொழில்துறை செயல்பாடுகள் மீது புதிய விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த நாடுகள் தங்கள் உற்பத்தியை தேவைக்கு பல மடங்கு அதிகரித்து, முறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிரம்ப், பிற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அதிக வரிக்கு பதிலடியாக, 1977 சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்தார்.
ஆனால் கடந்த மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த வரியை செல்லாது என்று ரத்து செய்தது. இதையடுத்து, வர்த்தக சட்டப்பிரிவு 122-ஐ பயன்படுத்தி 10 சதவீத கூடுதல் வரி விதித்தார். இந்த வரி 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இதையும் படிங்க: வரிவிதிப்பை ரத்து செய்ய மறுப்பு! அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கறார்!! மறு விசாரணை கேட்டு கெஞ்சும் ட்ரம்ப்!

இந்நிலையில், சட்டப்பிரிவு 301-ன் கீழ் தற்போது இந்தியா உட்பட 16 நாடுகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு, 10 சதவீத வரி காலாவதியானாலும், கூடுதல் வரி விதிப்பை தொடர முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் சோலார் செல் உற்பத்தி திறன் தற்போது உள்நாட்டு தேவையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இது சர்வதேச சந்தையில் அதிகப்படியான ஏற்றுமதிக்கு வழிவகுக்கலாம் என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதனால் சோலார் துறை இந்த விசாரணையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஸ்டீல், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி, வாகன உற்பத்தி துறைகளும் இந்த விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த விசாரணை இந்தியாவின் ஏற்றுமதி துறைகளுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தனது உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு இதற்கு ஏற்கனவே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அக்ரிமெண்ட் பைனல்! பின்வாங்கினால் அதிக வரி விதிப்பேன்! உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!