அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், வர்த்தக பற்றாக்குறை காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்தார். 'பரஸ்பர வரி விதிப்பு' என்ற பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு உலக நாடுகளுடன் அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது.
சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் (சுப்ரீம் கோர்ட்) 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், அதிபருக்கு இத்தகைய விரிவான வரி விதிப்புக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு டிரம்ப் அரசின் முக்கிய வர்த்தக கொள்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியான இந்த தீர்ப்பு, இன்டர்நேஷனல் எமர்ஜென்சி எகனாமிக் பவர்ஸ் ஆக்ட் (IEEPA) சட்டத்தின் கீழ் வரிகளை விதிக்க முடியாது என தெளிவுபடுத்தியது.
தீர்ப்புக்குப் பிறகு, டிரம்ப் அரசு புதிய 10 சதவீத உலகளாவிய வரியை அறிவித்து, பின்னர் அதை 15 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் பழைய தீர்ப்பால் பில்லியன் கணக்கான டாலர்கள் திருப்பித் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் ரீஃபண்ட் கோரி வழக்கு தொடர்ந்துள்ளன.
இதையும் படிங்க: அக்ரிமெண்ட் பைனல்! பின்வாங்கினால் அதிக வரி விதிப்பேன்! உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

இந்நிலையில், பிப்ரவரி 27 அன்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "அமெரிக்காவை பல ஆண்டுகளாக கொள்ளையடித்த நாடுகள், நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் திருப்பித் தரும் வழி ஏற்படுத்தியுள்ளது இந்த தீர்ப்பு. இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இந்த தீர்ப்புக்கு மறு விசாரணை (Rehearing) அல்லது மறு தீர்ப்பு (Readjudication) சாத்தியமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் விதிகளின்படி, மறு விசாரணை கோர முடியும் என்றாலும், அது மிக அரிதாகவே நிகழ்கிறது. பல தசாப்தங்களாக இதுபோன்ற மறு விசாரணை அனுமதிக்கப்படவில்லை. 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பால், பெரும்பாலான நீதிபதிகள் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிபர் டிரம்ப், மாற்று சட்டங்களைப் பயன்படுத்தி வரிகளைத் தொடர முயல்வதாக அறிவித்துள்ளார். இது உலக வர்த்தகத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இது நிவாரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியா வரி செலுத்தும்!! அமெரிக்கா செலுத்தாது!! அதிபர் ட்ரம்ப் வைத்த ட்விஸ்ட்!! மோடி குழப்பம்!