பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து ராணுவ தாக்குதல்களை இந்தியா தொடங்கிய நிலையில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் 27 அப்பாவி உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து இந்தியா தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் முசாபராபாத் உள்பட பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெஃரீஃப் இந்தியா ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எல்லையில் பூன்ச் ரஜூரி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்தியாவும் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பயங்கரவாதிகளின் தாக்குதலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானுக்கு உடனடியாகப் பதிலடி தரப்படும் எனத் தெரிகிறது. இதனால் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் சண்டிகர், ஜம்மு உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல பாகிஸ்தானில் லாகூர், கராச்சி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி! பல்வேறு விமானங்கள் ரத்து... பயணிகளை உஷார்ப்படுத்தும் நிறுவனங்கள்...
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தானின் 9 இடங்களை தகர்த்த இந்தியா.. அலறும் பாகிஸ்தான் பிரதமர்.!