ஆபாச மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் 24 செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App Wow Entertainment, Look Entertainment உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தளங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (பிரிவு 67, 67A), பாரதிய நியாய சன்ஹிதா (பிரிவு 294), மற்றும் பெண்களை அநாகரிகமாக சித்தரித்தல் தடைச் சட்டம் 1986 (பிரிவு 4) ஆகியவற்றை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் இந்தியா.. நாளை முதல் அமல்..!!
மேலும் இந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் இந்தியாவின் டிஜிட்டல் நெறிமுறைகளை மீறி, ஆபாச உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் சில செயலிகள் கூகுள் பிளேஸ்டோரில் கோடிக்கணக்கான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை நடவடிக்கை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், இளைஞர்களை ஆபாச உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்னர், 2015ல் 857 ஆபாச இணையதளங்களையும், 2024ல் 18 ஓடிடி தளங்களையும் அரசு முடக்கியிருந்தது.
இந்த நடவடிக்கைகள் இந்திய கலாச்சார மதிப்புகளைப் பாதுகாக்கவும், டிஜிட்டல் தளங்களில் ஒழுக்கத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், இத்தகைய தடைகள் தனிநபர் உரிமைகளைப் பாதிக்கலாம் என சிலர் விமர்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: தன்கர் ஏன் திடீர்னு ராஜினாமா பண்ணாரு? மறைக்காம சொல்லுங்க.. மத்திய அரசை கேள்வி கேட்கும் கார்கே!