தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், சட்டவிரோத குவாரிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.சட்டவிரோதமாக செயல்பட்டவர்களுக்கு முன்பு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய நிலை இருந்தது. ஆனால் புதிய நடைமுறையில், முறைகேடாக எடுக்கப்பட்ட கனிமத்திற்கு மெட்ரிக் டன்னுக்கு குறைந்த தொகை மட்டும் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், விதிமுறைகளை மீறி வளங்களைச் சுரண்டினால் பின்னர் பணம் செலுத்தி தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்குவது நியாயமா எனக் கேட்டார்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், அந்த அரசாணையை விரைவில் திரும்பப் பெற உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து தனது கட்சி சார்பில் குரல் எழுப்பியுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார். குறிப்பாக, மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அரசுடைமையாக்கி, அரசே அகழ்வு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தியதாக அவர் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் அரசு மணல் குவாரிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆனால், மீண்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டபோது எழுந்த பிரச்சினைகளையும் தனது கட்சி சார்பில் சுட்டிக்காட்டி வந்துள்ளதாக அவர் கூறினார்.தமிழகத்தின் இயற்கைச் செல்வங்கள் பொதுமக்களின் சொத்து. அவற்றின் மீது தனியார் ஆதிக்கம் உருவாகக் கூடாது என்பது தனது கட்சியின் நிலைப்பாடு என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!
அளவுக்கு மீறிய அகழ்வு என்பது வெறும் கல் அல்லது மணல் எடுத்துச் செல்வதோடு முடிந்துவிடாது. நீராதாரம் பாதிப்பு, விவசாய நிலங்களின் சீரழிவு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு என அதன் தாக்கம் தலைமுறைகளைப் பாதிக்கக்கூடியது என்று அவர் எச்சரித்தார்.வருவாய் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இயற்கை வளங்களை அளவின்றி எடுக்க அனுமதிப்பது யாருடைய நலனுக்காக என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்தக் கனிம வளத்தையும் தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளாக மாற்றக் கூடாது என வலியுறுத்தினார்.
மணல், கல் மற்றும் அனைத்து சிறுகனிம வளங்களின் அகழ்வு, கண்காணிப்பு, விற்பனை ஆகியவை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் மட்டுமே நடைபெறும் என்ற உறுதியான கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அவர் கோரினார். தனியார் நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் பொதுவளத்தைச் சுரண்டும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன் அதிலிருந்து கிடைக்கும் வருவாய் முழுமையாக தமிழக மக்களுக்குப் பயன்படும் வகையில் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!