சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தை நோக்கி புறப்பட்டார்.
பதவியேற்பு விழாவில் மூன்று முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
விழா முடிந்ததும், முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் இருபுறமும் திரண்ட மக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். மக்களின் மகிழ்ச்சியான வரவேற்புக்கு மத்தியில் விஜய் காரில் இருந்தபடியே கை அசைத்து நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்தாய் வாழ்த்தை முந்திய வந்தே மாதரம் பாடல்!! முதலமைச்சர் விஜய் பதவியேற்பு! இதுவரை இல்லாத புதுமை!

தலைமைச் செயலகத்தை அடைந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். முதன்முறையாக முதலமைச்சராக தலைமைச் செயலகத்துக்கு வந்த விஜய், முதல்வர் இருக்கையில் அமர்ந்து தனது அலுவல்களைத் தொடங்கினார்.
தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை உறுதி செய்து ஆட்சி அமைத்துள்ளது. நடிகராக புகழ் பெற்ற விஜய், அரசியலில் நுழைந்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
புதிய அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட சூழல் காணப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எத்தகைய சாதனைகளைப் படைக்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் அமைச்சரவை பதவியேற்பில் வேற்றுமை! தவெக தலைவரை பின்பற்றாத ஆதவ் அர்ஜூனா!!