மேற்கு வங்க மாநில அரசியலில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் (C.V. Ananda Bose) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாகத் தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என். ரவி (R.N. Ravi) மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்ற சி.வி. ஆனந்த போஸ், இன்று தனது ராஜினாமா கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது ராஜினாமாவுக்கான தெளிவான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
ஆளுநரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் ஆதாயங்களுக்காக மத்திய உள்துறை அமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்த ராஜினாமா நடந்திருக்கலாம்" எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளுக்கான மைல்கல்! முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னிடம் தெரிவித்ததாக மம்தா கூறியுள்ளார். வழக்கமாக மாநில அரசைக் கலந்தாலோசித்து ஆளுநரை நியமிக்கும் மரபை மீறி, மத்திய அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் மாண்பைச் சிதைப்பதோடு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையே தாக்குவதாக அமைந்துள்ளன. மாநிலங்களின் கண்ணியத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்" என மம்தா பானர்ஜி காட்டம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பத்ம விருது வெற்றியாளர்களுக்கு 'மக்கள் மாளிகையில்' கௌரவம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!