தமிழகத்தில் நிலவும் மின் தேவையை ஈடுகட்ட வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிகபட்ச விலைக்குக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ள தமிழக அரசுக்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்; "ஒரு காலத்தில் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில், இப்போது தனியாரிடம் கையேந்தி மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை வாரி இறைப்பது ஏன்? என்பது குறித்துத் தமிழக அரசு உடனடியாக மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் மாத மின்சாரத் தேவையைச் சமாளிக்க பீக் ஹவர்ஸில் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்குத் துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கை:
"தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மின் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற நிர்வாகக் குறைபாடுகளாலும், அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியதாலும், இன்று கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!
வெயிலின் தாக்கம் குறையவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, பொதுச்சந்தையில் தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு உச்சபட்ச விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கு என்ன அவசியம் வந்தது? இதன் பின்னணியில் யாருக்கு என்ன பலன்? இவ்வாறு பல மடங்கு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்கிவிட்டு, அந்த இழப்பை ஈடுகட்ட மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தலையில் கூடுதல் சுமையை ஏற்ற அரசு திட்டமிடுகிறதா?
அரசுக்குச் சொந்தமான மின் திட்டங்களை முழுத்திறனுடன் செயல்படுத்தாமல், தனியார் மின் நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் இந்த முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மின் கொள்முதல் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படையாக விளக்க வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக அரசகுமாருக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன்!