சென்னை உயர் நீதிமன்றம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், திமுக தேர்தல் களப்பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், கட்சி அமைப்பு பணிகளை திமுக தீவிரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனுடன், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மொத்தம் ஏழு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவானது.
இந்த நிலையில், நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. தேர்தல் மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவசரமாக தேர்தல் நடத்தக் கூடாது என்பதே மனுதாரரின் முக்கிய வாதமாக இருந்தது.
இதையும் படிங்க: வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

இருப்பினும், நீதிமன்றத் தடை தற்காலிகமானது என்பதால், சட்டச் சிக்கல்கள் தீர்ந்தவுடன் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையில் திமுக தனது தேர்தல் இயந்திரத்தை முன்கூட்டியே இயக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய ஏழு தொகுதிகளிலும் கட்சியின் பூத் கமிட்டிகள் புதுப்பிக்கப்பட்டு, அடிமட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த கால ஆட்சிச் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை வீடு வீடாக எடுத்துச் செல்லும் வகையில் பிரசாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியையும், இளைஞர்கள் மத்தியில் அக்கட்சிக்கு கிடைத்து வரும் ஆதரவையும் எதிர்கொள்ளும் வகையில், இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கைகள் குறித்து திமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களாகவே இவை பார்க்கப்படுகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான நீதிமன்ற விசாரணை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசியல் களத்தின் திசையை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இன்னும் 6 மாசத்துல மு.க.ஸ்டாலின் முதல்வராவார்!! திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்!