17-வது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தமிழக அரசியலில் முக்கியமான மாற்றத்தை வெளிப்படுத்தும் நிகழ்வு அரங்கேறியது. கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு மாறாக, தற்போதைய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை எந்த மாற்றமும் செய்யாமல் முழுமையாக வாசித்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உரையின் தொடக்கத்தில், கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை ஆளுநர் குறிப்பிட்டார். மக்கள் மாற்றத்தை விரும்பி இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மாநில வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற அடிப்படையில் அரசு செயல்படுவதாக உரையில் வலியுறுத்தப்பட்டது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் நலத்திட்டங்களும் கிடைக்கும் வகையில் ஆட்சி அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சட்டசபையிலேயே மன்னிப்பு கேட்ட கவர்னர்! முதல்வர் விஜய் புன்னகை! முதல் கூட்டத்திலேயே வரலாற்று நிகழ்வு!

தமிழகத்தின் பாரம்பரிய இருமொழிக் கொள்கையான தமிழ் மற்றும் ஆங்கில மொழி நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கை (NEP) மீது தமிழக அரசின் எதிர்ப்பு நிலைப்பாடும் உரையில் தெளிவாக பதிவு செய்யப்பட்டது.
மது ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசுகையில், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, ‘ஒன்றிய அரசு’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டதுடன், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
உரையின் நிறைவில் தந்தை பெரியார், காமராஜர், டாக்டர் அம்பேத்கர், ராணி வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சமூகநீதி சிந்தனைகளை முன்னெடுத்து அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய பல வார்த்தைகள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் இம்முறை முழுமையாக இடம்பெற்றிருப்பது, தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மற்றும் அரசுக்கு இடையே புதிய சுமுக அரசியல் சூழல் உருவாகியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்! உதயநிதி! எடப்பாடி பழனிசாமி! சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?