விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று உரையாற்றினார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடியின் பெயரும் புகைப்படமும் இடம்பெறாதது திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சைவம், வைணவம் சமயங்கள் குறித்தும் பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: திமுகவில் ஓரங்கட்டப்படும் பொன்முடி.. இனி அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி?

பின்னர் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, விழுப்புரத்திலும் அவருக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. சமீபத்தில் 8 மண்டலங்களுக்கு திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும் பொன்முடியின் பெயர் இடம்பெறவில்லை.

பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் விழுப்புரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளிலும் அவரது பெயர் மற்றும் புகைப்படம் தவிர்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டம்மியான பொன்முடி ... சீனுக்கு வந்த கனிமொழி... திமுகவில் அதிரடி மாற்றம்...!