கொடைக்கானல் கீழமலைப்பகுதி தாண்டிக்குடியில் கூடிய ரசிகர்கள், பொதுமக்களுக்காக தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்தினார்.
தவெக தலைவர் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1ஆம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த விஜய், பின்னர் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதி கிராமமான தாண்டிக்குடிக்கு கார் மூலம் வந்தார். மே 2ஆம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார்.

விஜய்யைக் காண அவரது தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்தனர். ஆனால், அன்று அப்பகுதியில் மழை பெய்தது. மக்கள் அவரைக் காண காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காருக்குள் இருந்தபடி விஜய் பயணித்தார். இந்நிலையில் மே 3ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் ஓட்டலுக்கு விஜய் திரும்பும்போது திறந்த ஜீப்பில் திடீரென பயணித்து ‘ரோடு ஷோ’ போல நடத்தினார்.
தாண்டிக்குடி மலைக் கிராமத்தில் சாலையின் இருபுறமும் உள்ளூர் மக்களும் ரசிகர்களும் விஜய்யைக் காண வெளியூர்களில் இருந்து வந்திருந்த ரசிகர்களும், கட்சியினரும் என நீண்ட நேரம் காத்திருந்தனர். விஜய்யைத் திறந்த வாகனத்தில் கண்டவுடன் அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். இந்நிலையில் இன்று மாலையும் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பும்போது சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து பொதுமக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விஜய் வருகையால் தாண்டிக்குடி கிராமத்தில் திருவிழா கூட்டம் போலக் காணப்படுகிறது. மே 5ஆம் தேதி பகல் 12 மணிக்கு தாண்டிக்குடியில் இருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் விஜய் சென்னை செல்கிறார். ஏற்கனவே கோவை சென்ற விஜய் ரோடு ஷோ நடத்தி மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில் தற்போது கொடைக்கானலிலும் ரோடு ஷோ போல நடத்தி மக்களை விஜய் ஈர்த்திருக்கிறார். விஜய் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' செய்வதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை கிண்டல் அடித்து வந்தனர். தற்போது விஜய் 'வொர்க் ஃப்ரம் ஃபீல்ட்' என்பது போல ரோடு ஷோக்களை நடத்தி மக்களையும் ரசிகர்களையும் தொண்டர்களையும் விஜய் சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் புகழ் பாடிய வைஷ்ணவி தவெகவிலிருந்து விலகல்.. கட்சியில் ஈகோ மோதல்.? வெளங்கிடும் விஜய் கட்சி!
இதையும் படிங்க: விஜய் விசிட்டால் வேலையிழந்த காவலர்... தவெக கொடியால் தவிக்கும் குடும்பம்...!