தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் 5 நாட்கள் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நேர்காணலில், தொகுதி நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது. இதுவரை 10,175 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் எடப்பாடியாரே தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள எடப்பாடியார், வேட்பாளர் தேர்விலும் தனது அனுபவத்தைக் கொண்டு களையெடுக்கத் தயாராகிவிட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக-வின் வியூகம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைமை அறிவித்துள்ளபடி, வரும் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.15 மணி வரை நேர்காணல் நடைபெறும். முதல் நாளான ஜனவரி 9 அன்று கொங்கு மண்டலத்தின் கோட்டைகளான கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் நேர்காணல் நடைபெறும்.
ஜனவரி 13-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுடன் புதுச்சேரி மற்றும் கேரள மாநில வேட்பாளர்களுக்கான நேர்காணலும் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலில் பங்கேற்க வருவோர் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை அவசியம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொகுதி நிலவரங்களை விரல் நுனியில் வைத்துள்ள வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், தகுதியான வேட்பாளர்களைக் கண்டறிவதில் எடப்பாடியார் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: "வரலாறு திரும்பப் போகிறது!" - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து!
ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கப் பத்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள அதிமுக, தற்போது வேட்பாளர் நேர்காணலைத் தொடங்குவதன் மூலம் மற்ற கட்சிகளை விடத் தேர்தல் பணிகளில் முழுகவனம் செலுத்தி செய்து வருகின்றனர். “மக்களைக் காப்போம் – தமிழ்நாட்டை மீட்போம்” என்ற முழக்கம் தொகுதி வாரியாக எதிரொலிக்கும் நிலையில், இந்த நேர்காணல் அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடியாரின் இந்த அதிரடி நகர்வுகள் ஆளுங்கட்சியான திமுக-விற்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!