அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் அதனை தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார்.மேலும் இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுவரை ஏதும் இல்லை நல்லதே நடக்கும் என பதிலளித்தார்.
அதிமுக ஒன்றிணைய பத்து நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே, “ நான் பத்து நாள் கெடு விதிக்கவில்லை பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன் . ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர் என பதிலளித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!
தொடர்ந்தது ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என்ற கேள்விக்கு அது உங்கள் கருத்து எனவும் பதிலளித்து விட்டு வேக வேகமாக புறப்பட்டுச் சென்றார்.
கெடு விதித்தாரா செங்கோட்டையன்?
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும். யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனையடுத்து செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு அதிகரித்தது. ஆனால் காலப்போக்கில் ஓ.பன்னீர்செல்வத்தை போலவே செங்கோட்டையனுக்கும் ஆதரவாளர்கள் இடையே மவுசு குறைய ஆரம்பித்ததாக கூறப்பட்டது.
அதிமுகவை ஒருங்கிணைப்பேன் எனக்கூறிய செங்கோட்டையன் எந்த முயற்சியும் எடுக்காததே இதற்கான காரணம் எனக்கூறப்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை தவிர்த்து வந்த செங்கோட்டையன், இன்று தனது கருத்தையே மாற்றிக் கூறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? - சஸ்பென்ஸை உடைத்த செங்கோட்டையன்....!