உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் சார்ந்த பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையின் போது அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், கட்சி கொடிகள், ஸ்டிக்கர்கள் இருந்தால் அதனை அகற்றிய பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் சார்ந்த மற்றும் திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்ந்த அதிமுக மாணவர் அணியினர் 2026 ஆண்டில் ஏழுமலையான் ஆசியுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என பேனர் வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிய நிலையில் இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர். மேலும் அலிபிரி சோதனை சாவடியில் எவ்வாறு இந்த பேனரை சோதனை செய்யாமல் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்தும் விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!
இதுகுறித்து தேவஸ்தான முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏழுமலையான் கோயில் முன்பு அரசியல் கட்சி தலைவர் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து ரீல்ஸ் எடுத்து பதிவிட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே இதனை காட்சிப்படுத்தி பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: ஏமாற்றும் திமுக... 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கல... அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்...!