அ.தி.மு.க.வில் உள் கட்சி மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ராஜ்யசபா எம்பியும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் மத்திய அமைச்சர் பதவிக்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தடை போடுவதால் இருவருக்கும் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்த சி.வி. சண்முகத்துக்கு 'பவர்' இல்லாமல் இருக்க முடியவில்லை. ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பழனிசாமியிடம் அடம்பிடித்தார். பழனிசாமி மறுத்த போது, தனது ஆதரவு எம்எல்ஏக்களிடம் கடிதம் வாங்கி நெருக்கடி கொடுத்தார். இதில் பணிந்த பழனிசாமி ராஜ்யசபா சீட்டை வழங்கினார்.
ஆனால் எம்பியான பிறகு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார் சண்முகம். பழனிசாமி இதை ஏற்க மறுக்கிறார். காரணம், கட்சியினருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் கட்சிக்கு என்ன பயன் என்று கருதுகிறார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் போட்டோவை எப்படி அகற்றுவேன்! அரசியலை விட்டே போறேன்! திடீர் ட்விஸ்ட் அடித்த குன்னம் ராமச்சந்திரன்!

மேலும், ஏற்கனவே குடைச்சல் கொடுக்கும் சண்முகம் மத்திய அமைச்சரானால் தனக்கு (பழனிசாமிக்கு) பெரும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. தனிப்பட்ட லாபக்கணக்கு போடுவதாக பழனிசாமி கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பழனிசாமி பாஜக மேலிடத்துக்கு மறைமுகமாக "மத்தியில் அமைச்சர் பதவி வேண்டாம்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தாதீர்கள்" என்ற செய்தி அனுப்பியுள்ளார். இதனால் சண்முகத்தின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்துள்ளது. ராஜ்யசபா பதவிக்காலம் முடிவதற்கு முன்பே 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் சண்முகம். இது கட்சியில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்கனவே உள் பிரிவுகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வரும் நிலையில், இந்த சி.வி.சண்முகம் - எடப்பாடி பழனிசாமி மோதல் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில் இது என்டிஏ கூட்டணியின் வலிமையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இறுதி முடிவு எப்போது வரும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய்!! காங்கிரஸ் நிர்வாகி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?!