தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறைத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் அவர் இவ்வாறு கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்தி கூறுகையில், “தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார். மக்கள் நடிகர் விஜய்யைப் பார்க்க வரவில்லை, தலைவர் விஜய்யைப் பார்க்கத்தான் வருகின்றனர். அவரைச் சந்தித்தது உண்மைதான். தமிழக அரசை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடவில்லை, ஆர்பிஐ தரவுகளை மட்டுமே குறிப்பிட்டேன்” என்றார்.
மேலும், திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசிய அவர், “கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு ஆகியவை காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கைகள். அதிகாரத்தில் பங்கு கோருவது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்காக வைக்கப்படும் கோரிக்கை. தற்போது பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி சேருங்க.!! திமுக மதிப்பதேயில்லை! அடம் பிடிக்கும் காங் நிர்வாகிகள்!

சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரவீன் சக்கரவர்தி, தமிழக அரசுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் விமர்சனம் வெளியிட்டிருந்தார். இதனால் தமிழக அரசியலில் பெரும் விவாதம் எழுந்தது. தற்போது அவரது இந்தப் பேட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி முரண்பாடுகளை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பு திமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மற்றொரு தரப்பு திமுகவின் அலட்சிய போக்கை விமர்சித்து, ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கோரி வருகிறது. இதற்கு முன்பு தமிழக காங்கிரஸ் எம்பியும் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரவீன் சக்கரவர்த்தியின் இந்தக் கருத்துகள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் புதிய சூறாவளியை ஏற்படுத்தியுள்ளன. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரல்களும் கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அவரு பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! கூட்டணிக்கு வேட்டு வைத்த பிரவீன் சக்ரவர்த்தி! செல்வப்பெருந்தகை காட்டம்!