அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவு காரணமாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்து வரும் சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அ.தி.மு.க. தற்போது பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் - வேலுமணி அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பிளவு தீவிரமடைந்துள்ள நிலையில், வேலுமணி அணியைச் சேர்ந்த ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் ராமலிங்கம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தலைமையில் ஈரோடு பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர்.
இதேபோல், தி.மு.க. தொண்டரணி மாநில இணைச் செயலர் காயத்ரி சீனிவாஸ், அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் பகுதி செயலர்கள், ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்க மொத்த கடனையும் அடைச்சிருறேன்! இந்த பக்கம் வந்திருங்க! பலத்தை கூட்ட பேரத்தை ஆரம்பித்த எடப்பாடி!
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆளுங்கட்சியாக இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து பல முன்னணி கட்சி நிர்வாகிகள் த.வெ.க. பக்கம் தாவி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணையும் போக்கு அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.வின் தொடர் பிளவுகள் கட்சியின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பழனிசாமி அணியினர் ஒற்றுமையை வலியுறுத்தினாலும், வேலுமணி-சண்முகம் அணியினர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்தப் பிளவு தொடரும் பட்சத்தில் மேலும் பல நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
த.வெ.க. தரப்போ, “அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கப்படுகின்றனர். கட்சியை வலுப்படுத்தி மக்கள் பணியில் ஈடுபடுவோம்” என வரவேற்பு தெரிவித்துள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க.வின் வெற்றிக்கு இந்த இணைப்புகள் பெரும் பலத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வின் எதிர்காலம் மற்றும் உட்கட்சி ஒற்றுமை குறித்த கேள்விகள் தொடரும் நிலையில், நிர்வாகிகளின் இணைப்பு அரசியல் சமன்பாட்டை மாற்றும் என்பது உறுதி.
இதையும் படிங்க: எண்ணம் ஈடேறணும்!! கட்சி கட்டுப்பாட்டுக்குள்ள வரணும்! ஹோமம் நடத்தி, திருஷ்டி கழிக்கும் அதிமுகவினர்!!