அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவு தீவிரமடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தங்கள் பலத்தை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவு அளிப்பதில் ஏற்பட்ட மோதலால் அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்களும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பும் தங்கள் அணியை வலுப்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கான சலுகைகளை உயர்த்திக் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கையில், “த.வெ.க. அரசு சட்டசபையில் பெரும்பான்மை நிரூபித்தாலும், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. எனவே முன்கூட்டியே அ.தி.மு.க. ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்க த.வெ.க. ஒப்புக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எண்ணம் ஈடேறணும்!! கட்சி கட்டுப்பாட்டுக்குள்ள வரணும்! ஹோமம் நடத்தி, திருஷ்டி கழிக்கும் அதிமுகவினர்!!

இருப்பினும், முன்னணி மாஜி அமைச்சர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்பதால் வேலுமணி தரப்பில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்களை தங்கள் பக்கம் இழுக்க பழனிசாமி தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேர்தலில் 15 கோடி ரூபாய் வரை செலவு செய்து, கடனில் மூழ்கியுள்ள பல எம்.எல்.ஏ.க்களுக்கு “உங்கள் கடனுக்கு நான் பொறுப்பு” என பழனிசாமி உத்தரவாதம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பாக வேலுமணி தரப்பினர், “ஆட்சியில் பங்கு கிடைத்தால் அனைவருக்கும் பலன் கிடைக்கும், பொறுமையாக இருங்கள்” என எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்து வருகின்றனர். இரு தரப்பும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வது எனும் அச்சம் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, யார் அதிக சலுகை அளிக்கிறார்களோ அவர்கள் பக்கம் சாயும் உத்தியை எம்.எல்.ஏ.க்கள் கையாண்டு, இரு தரப்பிடமும் பேரத்தை உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலை அ.தி.மு.க.வின் உட்கட்சி யுத்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கட்சியின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை அடுத்த சில நாட்களில் நடக்கும் பேச்சுவார்த்தைகளே தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை..!! சசிகலா, டிடிவி-யை இணைக்க வேண்டும்..!! எஸ்.பி.வேலுமணி விருப்பம்..!!