சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், கட்சியின் தற்போதைய நிலை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். வட மாவட்டங்களில் அதிமுக வென்ற பெரும்பாலான தொகுதிகள் பாமகவின் பங்களிப்பால்தான் என்றும், பாமக கூட்டணியில் இல்லையென்றால் அதிமுகவால் வெறும் 7 அல்லது 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சி.வி. சண்முகம் மேலும் கூறியதாவது, “பாமக ஆதரவு இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி கூட தனது தொகுதியில் மிகக் கடினமான போட்டியை எதிர்கொண்டு தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருப்பார்” என்றார். இந்தக் கருத்து அதிமுக மற்றும் பாமக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை நேரடியாக விமர்சித்த சண்முகம், “தி.மு.க.வுடன் இணைந்து முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்தது” என்றும் குற்றம் சாட்டினார். கட்சியில் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கொத்துக் கொத்தாக விலகிச் செல்வதற்கு பழனிசாமியின் தலைமையே காரணம் என்றும், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கப்சிப்னு இருக்கணும்! வாய திறக்கக்கூடாது! கட்சியில் மீண்டும் இணைந்தவர்களிடம் இபிஎஸ் கறார்!!

மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருவதாகவும், கட்சியின் வாக்கு வங்கி படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் சண்முகம் சுட்டிக்காட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம் தற்போது மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், கட்சியின் எதிர்காலம் குறித்து தீவிர சிந்தனை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுகவில் தொடர்ந்து நடைபெறும் உள்கட்சி பூசல்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் கட்சியின் வீழ்ச்சியை வேகப்படுத்தி வருகிறது. சி.வி. சண்முகத்தின் இந்தக் கருத்துகள் அதிமுகவின் தற்போதைய நிலையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.
அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கட்சியின் எதிர்காலம் குறித்த கவலை அதிகரித்துள்ள நிலையில், தலைமை இந்த விவகாரங்களை எப்படி கையாளப் போகிறது என்பதை உற்று நோக்குகின்றனர் அரசியல் வட்டாரங்கள்.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு கொக்கி போடும் தவெக! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தருவதாக பேச்சு!