மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஒன்றுபட்ட கருத்துடையவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனுக்கு சூசகமாக அழைப்பு விடுத்தார்.
உதயகுமார் பேசுகையில், “திமுக அரசு மீது அதிமுக தவிர வேறு யாரும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. 2021 தேர்தலில் திமுக அளித்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட நிறைவேற்றவில்லை. சட்டசபையைப் பார்க்காத சிலர் அதிமுக குறித்து பேசுகின்றனர். சட்டசபைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம்.
பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று, ஒன்றுபட்ட கருத்துள்ள யாரும் அதிமுகவுக்கு வரலாம். பொதுக்குழுவிலும் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அவரது தலைமையை ஏற்று அனைவரும் வர வேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்கு புரியும். யாரும் தயங்கத் தேவையில்லை” என்றார்.
இதையும் படிங்க: திமுக செய்யும் தகிடுதத்தம்!! வாக்காளர் பட்டியல் முறைகேடு! எடப்பாடி போடும் ஸ்கெட்ச்!


உதயகுமாரின் இந்தப் பேச்சு பன்னீர்செல்வம் மற்றும் தினகரனுக்கு நேரடியாக அழைப்பு விடுத்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.
இந்நிலையில் பன்னீர்செல்வமும் தவெக பக்கம் சாய்ந்தால், அக்கட்சிக்கு அதிமுக பிம்பம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் அதிமுக தரப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தடுக்கவே உதயகுமார் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி வியூகங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. உதயகுமாரின் அழைப்பு அதிமுகவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பறிபோகும் ராஜ்யசபா எம்.பி சீட்! பரிதாப நிலையில் மாநில கட்சிகள்!! வளைத்துபோடும் பாஜக!!