நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 2026 தேர்தலில் வாக்கு கேட்டு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆதங்கத்துடன் செய்தியாளர்களை சந்தித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் இன்று மாவட்ட அலுவலகமான சுரண்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அனைத்து அரசியல் கட்சியின் 50 ஆண்டுகால பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக சார்பில் கடந்த தேர்தலில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அடவிநயினார் அணையில் இருந்து வரக்கூடிய உபரி நீரானது சுரண்டை முதல் ஊத்துமலை வரை விவசாய நிலங்கள் சுமார் 7500 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பயன்படகூடிய வகையில் கால்வாய் அமைக்கக்கூடிய திட்டமாகும்.
இதையும் படிங்க: தங்கமணி, வேலுமணி உங்க வீரம் எங்க?... இபிஎஸ் ஆதரவாளர்களை கலாய்த்து அமமுக ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!
இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூபாய் 74 கோடி மதிப்பீட்டில் திட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களை சந்தித்தும் இதுவரை எந்தவித பயனும் பெறவில்லை மேலும் தென்காசிக்கு சமீபத்தில் வந்த முதல்வர் இந்த திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் சுமார் 1020 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்காசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சியில் 14 ஊராட்சிகளை தனியாக பிரித்து ஊத்துமலையை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் உருவாக்குதல், 50 ஆண்டு காலத்திற்கு மேலாக சுரண்டை கீழ் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள இரட்டை குளம் கால்வாய் திட்டம்,சுரண்டை செண்பக கால்வாய் ஓடையை சீரமைத்தல், சுரண்டை மற்றும் வீராணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனை தரம் உயர்த்துதல் போன்ற 10 முக்கிய திட்டங்கள் தென்காசி பகுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்து பலமுறை மனு வழங்கியிருந்தேன்.
ஆனால் மேற்படி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்களுடன் நானும் எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் முதல்வர் அறிவித்த 10 திட்டங்களில் மேற்படி திட்டங்கள் இல்லை.
தொடர்ந்து பேசியவர் தென்காசியின் முதன்மையான வாக்கு உறுதியாக இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தனது வாயால் பரப்புரையில் கூறினார். ஆனால் தற்போது அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தான் தென்காசியில் எங்கும் செல்ல முடியவில்லை. நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என்று மக்கள் என்னை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
வரக்கூடிய தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள். எனவே இதனை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும் தானே தனது சொந்த நிதியில் இதனை செய்து முடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார்.
மக்கள் மேம்பட தானே இந்த திட்டத்தை செய்ய தயாராக உள்ளதாகவும் முதல்வர் ஏமாற்றியது வேதனை அளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
திமுக கட்சியின் கூட்டணி கட்சிகளின் ஒன்றான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உள்ளூர் உற்பத்தியை கண்டுக்காம வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வராராம்! என்ன பயன்? முதல்வரை விளாசிய நயினார்…!