தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக பாஜகா கூட்டணியை திமுகாவை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக நான் பார்க்கவில்லை எனக்கூறியது கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக அந்தர் பல்டி அடித்து பேசியிருக்கிறார். அண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசியதன் பரபரப்பு பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக மாநிலத் தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அன்றைய தினம் பாஜகவினரிடையே உரையாற்றிய அண்ணாமலை “இவ்வளவு நாள் எனக்குப் பொறுப்பு இருந்தது. இனி நான் சுதந்திரமாகப் பேசலாம்; செயல்படலாம். இனி அரசியலில் சிக்ஸர் அடிப்பது தான் என் வேலை” என்றார். அப்போது பாஜக தலைமை அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து லைம் லைட்டில் பிரகாசித்து வந்த அண்ணாமலை, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் வந்ததும் இருக்கிற இடம் தெரியாத அளவிற்கு கப்சிப் ஆனார்.
இதையும் படிங்க: நயினாரை சந்தித்து என்ன பேசுனீங்க? திருப்பூரில் 2 காவலர்கள் ஆயுத படைக்கு மாற்றப்பட்டதன் காரணம்..!

கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தை புறக்கணித்தது, ஜேபி நட்டா சென்னை வந்தபோது அவரை சந்திக்காதது, பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது என பாஜக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருந்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில் தான் கொங்கு மண்டலத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டித்து ஈரோட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணாமலை. கட்சி தலைமை அறிவித்த போராட்டங்களில் பங்கேற்காமல் தன்னிச்சையாக அண்ணாமலை போராட்டத்தில் குதித்தது சர்ச்சையை கிளப்பியது.

இதனிடையேதான் திமுகவை வீழ்த்துவதற்கான வலிமையான கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணியை பார்க்கவில்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். இவர் இந்த பேச்சால் தலைமை மட்டுமின்றி அதிமுக பாஜக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அண்ணாமலை மீது அடுத்தடுத்து புகார்கள் போன நிலையில், அமித் ஷாவே அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இனி வாயே திறக்கக்கூடாது எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் கூட்டணி குறித்தெல்லாம் கட்சி தலைவர்கள் தான் பதில் சொல்வார்கள். பாஜக கூட்டணி வலுவாகத்தான் உள்ளது என்று அந்தர் பல்டி அடித்தார்.

இப்படி இவர் மாறி மாறி பேசி வருவது அதிமுகவினர் மட்டுமின்றி கமலாலய சீனியர்களையே கடுப்பாக்கியதாக கூறப்படுகிறது. இச்சூழலில் தான் அண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசியதன் பின்னி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது மாநில தலைவர் பதவியை தக்க வைத்து கொள்ள தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் தனக்கு தேசிய தலைமை மத்திய இணையமைச்சர் பதவியை கொடுக்கும் என்று அண்ணாமலை எதிர்பார்த்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் அண்ணாமலை அப்செட்டின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். இதனால்தான் அவர் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளுக்கு பாஜக தலைவர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தினர். ஆனால் அண்ணாமலை மற்றும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறவில்லை. இதெல்லாம் தேசிய தலைமைக்கு புகாராக சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தான் தற்போது அண்ணாமலை அடக்கி வாசிப்பதாக சொல்கின்றனர். அதே நேரம் தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில் தான் அண்ணாமலை இப்படி மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்கின்றனர் கமலாலய சீனியர்கள்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இதயத்தில் அண்ணனுக்கு தனி இடம் இருக்கு.. யாரை சொல்கிறார் அண்ணாமலை?