சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000 பேர் சிகிச்சை பெற்று வரும் மிக முக்கியமான மருத்துவமனை. இங்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குடிநீர் வசதி இல்லாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே, அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் அவலநிலையில் திமுக அரசு வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே, கடந்த மே மாதம், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 கல்லூரிகளில், போதிய மருத்துவர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்றும் மாணவர் சேர்க்கை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார். ஆனால், திமுக அரசு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று கூறிய அண்ணாமலை, ஒவ்வொரு முறையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், தனது பங்குக்கு ஒரு விளம்பர நாடகத்தை அரங்கேற்றுவதோடு, தனது பணி முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறார் என்றும் இதனால், பாதிக்கப்பட்டது, ஏழை எளிய பொதுமக்களே எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பதில் சொல்ல டைம் இல்ல… ஈரோட்டில் தவெக ஏற்பாடுகள் பிரம்மாண்டம்! – செங்கோட்டையன்
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளான, சுத்தமான குடிநீர், சுகாதாரமான மருத்துவமனை வளாகம், போதிய மருத்துவர்கள், மருந்துகள் என அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ‘பேசணும்… கம்முனு இருக்கக் கூடாது!’ – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை