புதுச்சேரி: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூண் பிரச்னையில் திமுக அரசு தேவையின்றி மதக்கலவரத்தைத் தூண்டுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரியில் முருக பக்தர்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 16 அன்று நடைபெற்ற தீபம் ஏற்றும் போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவின் முக்கிய வேலையே திருப்பரங்குன்றம் முருகனைச் சீண்டுவதாக உள்ளது. ராமநாதபுரம் திமுக எம்பி மலையில் பிரியாணி சாப்பிட்டது, மலைப் பெயரை சிக்கந்தர் மலை என மாற்ற முயல்வது, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைப்பது போன்ற செயல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது வரும் தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
நீதிமன்றம் டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்த பிறகு மூன்று நாட்கள் கழித்தே வக்பு வாரியம் ஆஜரானது என்றும், அது திமுகவால் தூண்டப்பட்டதே என்றும் அவர் குற்றம் சாட்டினார். “நீதிபதி தீர்ப்பில், தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளார். தீபத்தூண் கோவிலுக்குச் சொந்தம் என்று சொல்லும்போது தர்காவுக்கு என்ன பிரச்னை?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் பலி! இது விபத்து அல்ல! திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை!
கடந்த 1995 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தர்கா தரப்பே தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “இப்போது திமுக தர்கா தரப்பினரைத் தூண்டிவிட்டு நாடகம் நடத்துகிறது. இது மதக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி” என்று கண்டித்தார்.

மேலும், புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும், அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறினார். நடிகர் விஜய் இப்பிரச்னையில் கருத்து தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு, “கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு, கும்முனு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருக்க வேண்டும் என விஜயே கூறியுள்ளார். அரசியலில் அப்படி இருக்க முடியுமா? தவறு என்றால் தவறு என்று சொல்ல வேண்டும். நடுவில் நின்றால் சாலை நடுவில் வண்டி வருவது போலாகிவிடும்” என்று பதிலளித்தார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பெயர் மாற்றம் குறித்தும் பேசிய அண்ணாமலை, “காந்தியை உண்மையாக மதிப்பவர் பிரதமர் மோடிதான். 2014க்குப் பிறகு பல இடங்களுக்கு காந்தி பெயர் வைத்துள்ளோம். புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை அல்லது பென்ஷன் வழங்கப்படுகிறது. இதை திமுக ஏன் பேசுவதில்லை?” என்று கேட்டார்.
நீதிபதி சுவாமிநாதன் மீது கையெழுத்து இயக்கம் நடத்திய 120 எம்பிக்களை விமர்சித்த அவர், “அவர்கள் நீதிபதியைப் பதவி இறக்கம் செய்யக் கையெழுத்துப் போடவில்லை, தங்கள் பதவியை காலியாக்கக் கையெழுத்துப் போட்டுள்ளனர்” என்று கூறினார்.
திமுகவுக்கு முருகன், பாஜக, இந்து முன்னணி, குங்குமம், பொட்டு, குன்று, விஜய் என எல்லாவற்றையும் பார்த்தாலே பயம் என்று கிண்டலடித்த அண்ணாமலை, சபரிமலை தீர்ப்பை எதிர்த்தது போல நீண்டகால பழக்க வழக்கத்தை மாற்றியதால்தான் என்றும், திருப்பரங்குன்றத்தில் நீண்டகால பழக்கத்தைப் பின்பற்றியதால்தான் ஆதரிப்பதாகவும் விளக்கினார்.
விசிக தலைவர் திருமாவளவன் குறித்தும் பேசிய அவர், “திருமாவளவன் தீர்ப்பை முதலில் படிக்கட்டும். கோவிலுக்கு வந்தபோது திருநீறு வைத்துக்கொண்டு, செல்பி எடுக்க வரும் பெண்ணைப் பார்த்ததும் திருநீற்றைத் துடைத்துவிட்டு செல்பி எடுத்தவர் எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் RIGHT HAND டிடிவி தினகரன்... புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...!