தருமபுரி மாவட்டம் தளி தொகுதியில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை தமிழகத்துக்கு கொடுத்துள்ளார். ஆனால் திமுக தலைவர்கள் எல்லாவற்றையும் பொய் என்று சொல்கிறார்கள். கிருஷ்ணகிரியில் உள்ள ஒசூரில் பல நிறுவனங்கள் வந்துள்ளன. 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றை திமுக தலைவர்கள் யாராவது ஒருவர் பட்டியலிட்டு சொல்லியிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மோடி - பழனிசாமிக்கும்!! ஸ்டாலின் - ராகுலுக்கும் இதான் வித்தியாசம்! வெளுத்து வாங்கும் அண்ணாமலை!
அண்ணாமலை மேலும் பேசுகையில், “எதற்கெடுத்தாலும் காலையில் ஹிந்தி, ஹிந்தி என்றும், மதியம் டெல்லி, டெல்லி என்றும், மாலையில் மோடி வஞ்சிக்கிறார், மோடி வஞ்சிக்கிறார் என்றும் திமுக தலைவர்கள் சொல்வார்கள். எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. தட்டிப் பார்த்தால் உண்மை எல்லோருக்கும் தெரியும்” என்று கூறினார்.

ஸ்டாலினை விவசாயி இல்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, “பால் கொம்பில் இருந்து வருகிறதா? காம்பில் இருந்து வருகிறதா? என்று தெரியாது. டெல்டா பகுதியில் விவசாய நிலத்தில் கான்கிரீட் ரோடு போட்டு நடக்கிறார். 2022ல் பஞ்சு வைத்து பொங்கல் வைத்து போட்டோ எடுக்கிறார்.
ஸ்டாலின் 5 ஆண்டுகளை சும்மா இருந்து ஓட்டிவிட்டார். நடிகர் வடிவேலு சொல்வது போல, சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். தமிழகத்தில் 5 ஆண்டுகள் சும்மா இருந்த ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டப்பட்டு வெளியே போகிறார் என்று யோசித்துப் பாருங்கள்” என்று கடுமையாக தாக்கினார்.
இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் என்.டி.ஏ. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள இந்த கட்டத்தில், அண்ணாமலையின் கடுமையான விமர்சனங்கள் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பிய அவரது பேச்சு, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது
இதையும் படிங்க: கருணாநிதி செஞ்ச அதே தப்பை மு.க.ஸ்டாலினும் செய்கிறார்!! அண்ணாமலை குற்றச்சாட்டு!