சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் இருப்பதாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் அவையில் விமர்சனம் செய்தார். என்ன நடந்தாலும் நான் வாய் திறக்க மாட்டேன் என சரித்திர புரட்சி செய்துள்ளார் முதல்வர் விஜய் என்று எம்எல்ஏ ஆஸ்டின் விமர்சனம் செய்தார். அப்போது அவருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என்ன பேச வேண்டும் இப்போது பேச வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தெரியும் கூறினார்.
மேலும், விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். விளாத்திகுளம் விவகாரத்தில் 25 மணி நேரத்தில் வழக்கு பதிந்து உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்டின் பதிலளித்தார்.

அப்போது, ஐந்து நிமிடம் முதல்வர் விஜய் பேசியதற்கு கொளத்தூரில் என்ன நடந்தது என உங்களுக்கே தெரியும் என திமுக எம்எல்ஏவுக்கு ஆதவ் அர்ஜுனா பதில் கொடுத்தார். விளாத்திகுளம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கொளத்தூர் பற்றி எதற்காக பேச்சு என்று திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தவெக அரசின் வெள்ளை அறிக்கை... மரபு தெரியுமா..? சட்டபேரவையில் காரசார வாதம்..!
முதல்வர் விஜய் கொளத்தூரில் பேசிய போது என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும் என்று பதில் கூறியதால் திமுகவினர் ஆத்திரமடைந்தனர். அப்போது, அவையில் திமுக உறுப்பினர் மரபை மீறி பேசுகிறார் என்றும் எங்களுக்கும் பேச தெரியும் என்றும் அமைச்சர் ஆதவ் கூறினார். தொடர்ந்து திமுக உறுப்பினர் ஒருமையில் பேசியதற்கும் எங்களுக்கும் ஒருமையில் பேச தெரியும் என்று அமைச்சர் ராஜ்மோகன் பதில் கொடுத்தார். எங்கள் தலைவரின் கண் அசைவிற்காக காத்திருக்கிறோம் என்றும் இதுவரை ஒழுக்கத்தோடு இருந்தோம் இனியும் இருப்போம் எனவும் ராஜ்மோகன் தெரிவித்தார். இதனால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அத்தனையும் உருட்டா சார்..? சட்டப்பேரவை LIVE CUT..! விளாசிய அதிமுக..!!