சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 2024 தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனி பெற்ற வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 10) இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட நவாஸ்கனி, சுயேச்சையாக களமிறங்கிய பன்னீர்செல்வத்தை 1 லட்சத்து 66,782 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதை ஏற்க மறுத்த பன்னீர்செல்வம், நவாஸ்கனியின் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணை நடந்து வந்தது.
நவாஸ்கனி தரப்பில் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் பன்னீர்செல்வம் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஆனால் சமீபத்தில் பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதனால் அவரது அரசியல் நிலைப்பாடு மாறியது. நேற்று நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீடு துவங்குவதில் முட்டுக்கட்டை! விஜயை உள்ளிழுக்க விரும்பும் அமித்ஷா!! இபிஎஸ் அதிருப்தி!

நீதிபதி கார்த்திகேயன், தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இதனால் வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த பிறகு, திமுக கூட்டணி வேட்பாளரான நவாஸ்கனிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது அவரது புதிய அரசியல் பயணத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி எம்பியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய சமரச அரசியலுக்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் புகழ்பாடுவதை நிறுத்துங்கள்! விசிகவில் எதிர்ப்பு குரல்!! திருமாவளவன் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!