மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால், திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பாதிப்பு வரும் என்பதால் தான் திமுக மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். இதனையடுத்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமகல்விக் கொள்கையை நோக்கி தமிழகம் செல்ல மும்மொழிக் கொள்கையை ஏற்போம் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் பூத் வாரியாக பாஜக தொண்டர்கள், பொதுமக்களுடன் இணைந்து வீடு வீடாக சென்று கையெழுத்தை பெற வேண்டும் என்றும், சமக்கல்வி இணையதளத்தில் டிஜிட்டல் வடிவில் கையெழுத்திடலாம் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். தமிழக மாணவர்களின் உணர்வை வெளிப்படுத்தவே இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனால் பாஜக தொண்டர்களின் முழு கவனமும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மீது தான் உள்ளது.
இதையும் படிங்க: இவருக்கா தமிழிசைனு பேரு வெச்சோம் என அவரது தந்தை வருத்தப்படுவார் - அமைச்சர் சேகர்பாபு..!

தற்போது 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு அருகே கையெழுத்து இயக்க பதாகைகளுடன் குவியும் பாஜகவினர், மாணவர்களை விரட்டி, விரட்டி கையெழுத்து போட கட்டாயப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று அரசு பள்ளி மாணவர்கள் சிலரிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜக நிர்வாகிகள் கேட்க, அவர்களோ “TVK, TVK” என கத்தியபடியே ஓட்டம் பிடித்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, கடுப்பான தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதுதான் உங்க கையெழுத்து இயக்கத்தோட லட்சணமா?, மாணவர்களை விரட்டி, விரட்டி கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவீங்களா? என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கிழித்தெடுத்தனர். தற்போது இன்று காலை முதலே மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை காரப்பாக்கத்தில், பாஜக மாநில ஆன்மிக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திமுக உடன் பிறப்புகள் எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் மனதில் நஞ்சை கலக்கும் வகையில் இப்படியெல்லாம் செய்யலாமா? இதெல்லாம் ஒரு பொழப்பா? என விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.