அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது பாஜக சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக இயங்கியது. குறிப்பாக அண்ணாமலை தனக்கென ஒரு தனி வார் ரூமை வைத்துக்கொண்டு தன்னை எதிர்த்து பேசும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரை சரமாரியாக விமர்சித்து வருவதாகக்கூறப்பட்டது. இந்த சர்ச்சையை நடிகை காயத்ரி ரகுராம் ஆரம்பித்து வைத்த நிலையில், அண்ணாமலைக்கு மிக, மிக குளோசாக இருந்த சூர்யா சிவாவே பேட்டிகளில் குறிப்பிட ஆரம்பித்தார். இதனால் பாஜகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் வார் ரூம் பாலிட்டிக்ஸ் என்ற புதிய வார்த்தை பாஜக அரசியல்வாதிகள் மத்தியில் உச்சரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடைந்து, பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து செயல்படுவார் எனக்கூறப்பட்ட நிலையில் தான், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்திருந்தது. அப்போது அதிமுகவை பொது வெளியில் தரக்குறைவாக விமர்சித்த அண்ணாமலை மாநில தலைவராக தொடரும் பட்சத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தங்களால் அங்கம் வகிக்க முடியாது என கறாராக கூறியதாக தெரிகிறது.

அதேபோல் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கும் படியும் பாஜக மேலிடத்திற்கு இவர் தான் பரிந்துரைத்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையைத் தூக்கியடித்த பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனை அங்கே அமர வைத்தது. நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழாவில் பேசிய அண்ணாமலை, இதுவரை தனக்கு பொறுப்பு இருந்ததாகவும், இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம், மற்றவற்றை எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்துக்கொள்வார் என பேசியிருந்தார்.

இதையும் படிங்க: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஆவேச பதிலடி கொடுத்த கே.எஸ்.அழகிரி..!
இதனையடுத்து அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை கொடுத்த பேட்டி, டெல்லி தலைமை வரை புகாராக சென்றது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவே அண்ணாமலையை கொஞ்சம் நாவடக்கத்துடன் நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனால் தற்போது அண்ணாமலை அடக்கி வாசிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்து வந்த நயினார் நாகேந்திரன் முதல் முறையாக படு ஓபனாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கமலாலயத்தில் பாஜகவின் ஊடகப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார். அப்போது, பாஜகவில் இனி வார் ரூம் பாலிட்டிக்ஸ் இருக்கக் கூடாது. இந்த 15 எக்ஸ் தள கணக்குகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவில் இனி எந்த நபர்களுக்கு ஆதரவாகவும், யாருக்கும் எதிராகவும் பதிவிடக் கூடாது. அதேபோல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறாக பதிவிடுவோர் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற சோசியல் மீடியா கணக்குகளை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு வார் ரூம் அரசியல் செய்பவர்களின் கணக்குகளை குளோஸாக கண்காணிக்கும் என்றும் அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.!