தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்தி, டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து கழகங்களின் நஷ்டம் காரணமாக கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து பரவியது.
இதையடுத்து, அரசு கருத்து கேட்பு நடத்தியதாகவும், கட்டண உயர்வு விரைவில் அமலாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியதாகவும், கட்டண உயர்வு இல்லை எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண வசதி உள்ளதால், கட்டண உயர்வு வதந்தி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அரசின் உறுதியான மறுப்பு மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், உண்மைத் தகவல்களை அரசு அறிவிப்புகள் மூலம் அறியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்.. எதிர்பார்ப்பில் பகுதிநேர ஆசிரியர்கள்..!
இந்த சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் சிவசங்கர், பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கரிடம் அரசு பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக பரவும் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் அவ்வப்போது போக்குவரத்து கட்டண உயர்வு என வதந்தி பரவுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் வதந்தியை நாங்கள் மறுத்து வருகிறோம். பேருந்து கட்டண உயர்வு குறித்து எந்தவித திட்டமும் தற்போதைக்கு இல்லை. இப்பொழுதும் அதையே உறுதிப்படுத்துகிறோம் என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கான சூழ்நிலை ஏற்பட்டபோதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்று போக்குவரத்து கழகங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சாதாரண ஏழை, எளிய மக்களிடம் கட்டணச் சுமையை உயர்த்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். எனவே, தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் இருக்காது' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் ஒன்றை பேசுவார். ஆனால் நடைமுறைக்கு வரும் பொழுது வேறு விதமாக இருக்கும். 2036 வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுடன் மேடையில் அமர்ந்திருக்க இவர் வாய் கட்டி, வாய்மூடி மௌனமாக அமர்ந்திருந்தார். இப்பொழுது ஒன்றை பேசுகிறார். இன்னும் சில காலம் கழித்து என்ன பேசுவார் என்று காலம் நமக்கு உணர்த்தும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அதை ஒரு கட்சியாவே நாங்க நினைக்கல - தவெகவை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர்...!