மதுரையில் கடந்த 21ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “அங்கிள்” என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், விஜய், திமுக ஆட்சியை “மன்னராட்சி” என்றும், ஊழல் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். “நேர்மை, நியாயம், சட்டம் ஒழுங்கு இருக்கிறதா, ஸ்டாலின் அங்கிள்?” எனக் கேள்வி எழுப்பி, திமுகவை தாக்கினார்.

விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “அங்கிள் என்று அழைத்தது அரசியல் அற்ற, தரம்தாழ்ந்த வார்த்தை” என கண்டித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், இது ஆபாசமான கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதாகவும், விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுக வர்த்தக அணியின் கூட்டத்தில், விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேசமயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விஜய்யின் பேச்சு ஆரோக்கியமற்ற அரசியலுக்கு உதாரணம் என விமர்சித்தார்.
இதையும் படிங்க: மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக விஜய்யின் 800 மீட்டர் ரேம்ப் வாக் நடைபெற்றது. இதன்போது, விஜய்யை நெருங்க முயன்ற தொண்டர்களை பவுன்சர்கள் கடுமையாகத் தடுத்து, சிலரை தூக்கி வீசிய சம்பவங்கள் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகின. மேலும், விஜய்யின் வேண்டுகோளை மீறி, குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் முதியோரை பவுன்சர்கள் வெளியேற்றியதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவங்கள் விஜய்யின் பிம்பத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளன. முன்னதாக, கல்வி விருது விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பவுன்சர்களின் அடாவடி நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது தவெக நிர்வாகமா அல்லது பாதுகாப்பு நிறுவனமா என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார் என்பவர், தன்னை பவுன்சர்கள் தாக்கி காயமடையச் செய்ததாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் மீது குன்னம் காவல் நிலையத்தில் தகாத வார்த்தைகள் பேசுதல், அத்துமீறுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

விஜய்யின் பெயர் முதல் நபராக இடம்பெற்றது. தற்போது, இந்த வழக்கு விசாரணைக்காக பெரம்பலூர் காவல் நிலையத்திலிருந்து மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரை காவல் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர். தவெக மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் விசாரணை நடைபெறலாம்.
இந்த சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக தவெக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. வழக்கு விசாரணையின் முடிவு அரசியல் மற்றும் தவெகவின் எதிர்கால நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!!