2036ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற அரசின் தொலைநோக்கு இலக்கை அடைவதில் எரிசக்தித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை வழங்கும் உடன்குடி நிலை–I மற்றும் SEZ அனல் மின் திட்டம் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
சுமார் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் "விநியோக உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" (DIDP), பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!
மேலும், ரூ.5,050 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமலை நீரேற்று புனல்மின் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும்.
அதிகபட்ச மின் தேவையை திறம்பட நிர்வகிப்பதில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மிக முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, இத்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் BESS Hub ஆக மாற்றும் வகையில் புதிய BESS ஊக்குவிப்பு கொள்கையை வெளியிடும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்துடன் இணைந்து, புதிய வீட்டு கூரை சூரிய மின் மானியத் திட்டம் (Rooftop Solar Subsidy Scheme) அறிமுகப்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய மின் பலகைகள் அமைக்கும் நுகர்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் மின்சாரக் கட்டணச் சுமை குறைவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடும் அதிகரித்து, பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் ஊக்கம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2035–36ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவை 37,000 மெகாவாட் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் மின் விநியோகத் துறைகளில் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத் திட்டமாக கோயம்புத்தூர்–அரியலூர் 765 கிலோவோல்ட் (kV) மின் பரிமாற்றப் பாதைத் திட்டம், ரூ.4,000 கோடி செலவில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்படும்.
மேலும், சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக உயரழுத்த மின் பரிமாற்றக் கட்டமைப்பை ரூ.390 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பசுமை எரிசக்தியை திறம்பட கொண்டு செல்லும் நோக்கில், ரூ.1,187 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் தாழ்வாரம் இரண்டாம் கட்ட திட்டமும், ரூ.1,640 கோடி மதிப்பிலான விருதுநகர்–கோயம்புத்தூர் 765 கிலோவோல்ட் மின் பரிமாற்றத் திட்டமும் விரைவுபடுத்தப்படும்.
மேலும், 11,760 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கையாளும் திறன் கொண்ட ரூ.6,884 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் தாழ்வாரம் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியுதவியைப் பெற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
மின் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
மேலும், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழைய Distribution Transformers படிப்படியாக மாற்றப்படும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், PPP முறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பொது EV Charging Stations அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் Electric Vehicle Charging Stations-க்கு அரசு மானியம் வழங்கும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுவதற்காக இந்த திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.1,545 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக நுகர்வோர் மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் மின் மானியத்திற்காக, இந்த திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.18,860 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகத்திற்கு (TNPDCL) இழப்பீட்டு நிதியாக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில், எரிசக்தித் துறைக்கு த்தம் ரூ.15,828 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் ரயில் திட்டங்கள் ஏன் இத்தனை தாமதம்? கர்நாடகா மாடலை பின்பற்ற கோரிக்கை!