சென்னை தியாகராயநகர் பாலன் இல்லத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் ஐந்தாவது நாளாக தொடர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஐந்தாவது நாளான இன்றும் ஏராளமானோர் தன்னார்வமாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து, "நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உயர்கல்வித் துறையில் சில அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், அமைச்சர் மட்டும் பதவி விலகவில்லை. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டின் 'ஜந்தர் மந்தர்' என்று அழைக்கப்படும் பாலன் இல்லத்தில் ஐந்தாவது நாளாக அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக காவல்துறையினர் எங்கள் தோழர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. கல் எறிய மாட்டோம்; தீ வைக்க மாட்டோம். ஜல்லிக்கட்டு போராட்டம் எங்களுக்கு முன்னுதாரணம். சமூக மாற்றத்திற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.
அனிதா முதல் அணுக்கீர்த்தனா வரை நீட் காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக ஒன்றிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிற்கு நிரந்தர நீட் விலக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
இன்று காவல்துறையினருக்கு ரோஜா மலர்கள் வழங்கி அவர்களை வரவேற்க உள்ளோம். எங்களை அச்சுறுத்தினாலும், கைது செய்தாலும், வழக்குப்பதிவு செய்தாலும் நாங்கள் எதிர்வினை ஆற்ற மாட்டோம். எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அமைதியான ஜனநாயக வழியில் போராடுவோம்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 27 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குற்றம் நடந்தால் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம். ஆனால், நீட் தேர்வில் ஆண்டுதோறும் முறைகேடுகள் தொடர்கின்றன. முந்தைய ஆண்டுகளில் மாணவிகளின் உடை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர். சில ஆண்டுகளில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளும் இடம்பெற்றன. இவ்வாறு நீட் தேர்வு தொடர்ந்து சர்ச்சைகளையும் முறைகேடுகளையும் சந்தித்து வருகிறது.
எங்களின் போராட்டம் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை விரிவடைந்துள்ளது. இனி எந்த மாணவரின் உயிரும் நீட் காரணமாக பறிக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டிற்கு நிரந்தர நீட் விலக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!