தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அதிருப்தியில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், “தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் சிதம்பரம் முக்கியப் பங்கு வகித்தார். ராகுல் காந்தி த.வெ.க.வுடன் (விஜய்) கூட்டணி விரும்பியதால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சிதம்பரம் தலையிட்டு, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் நேரடியாகப் பேசி, தி.மு.க.வுடனான கூட்டணியைத் தக்க வைத்தார். இதற்காக முதல்வர் ஸ்டாலினை அவர் மூன்று முறை தனியாகச் சந்தித்துப் பேசினார்” என்றனர்.
ஆனால், ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்தபோது சிதம்பரத்தை அழைத்துப் பேசவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 15 மற்றும் 20-ம் தேதிகளில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர், ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது தன்னை அழைப்பார் என்று சிதம்பரம் எதிர்பார்த்தார். ஆனால் ராகுல் தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
இதையும் படிங்க: அமித்ஷா கோரிக்கைகளை நிராகரித்த பழனிசாமி!! பாஜக கேட்ட தொகுதிகள் கைவிரிப்பு!

மேலும், சிதம்பரத்தின் சொந்தத் தொகுதியான காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரடியாகப் போட்டியிடுவதாலும், த.வெ.க. புதிதாக களமிறங்கியுள்ளதாலும் நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இங்கு ராகுலை பிரசாரத்துக்கு அழைத்து வர சிதம்பரம் முயற்சித்தும் அது நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த அணுகுமுறையால் அதிருப்தியடைந்த சிதம்பரம், தன் வருத்தத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் பகிர்ந்துகொண்டதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “2004 முதல் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 41 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரியது. ராகுலின் விருப்பத்தால் த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு வந்தபோது, சிதம்பரம் தலையிட்டு கூட்டணியை மீட்டெடுத்தார். ஆனால் ராகுல் அவரை கண்டுகொள்ளாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.
இந்த உள்ளூர் அதிருப்தி தமிழக காங்கிரஸில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் வரை இந்தப் பதற்றம் தொடரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!