விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானை வழிபடும் முக்கியமான இந்துப் பண்டிகைகளில் ஒன்றாகும்.
இதையொட்டி, வீடுகள் மற்றும் கோயில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. தடைகள் நீங்கி, குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக வேண்டும் என பக்தர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து, அருகம்புல், மலர்கள், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. விநாயகருக்கு மிகவும் முக்கியமான நைவேத்தியமாகக் கருதப்படும் கொழுக்கட்டை, மோதகம், எள்ளுருண்டை, சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் படைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்... பிள்ளையார் பட்டியில் அதிகாலை முதலே அலைகடலென குவிந்த பக்தர்கள்...!
சென்னையைப் பொறுத்தவரை, விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான முகூர்த்த நேரம் காலை 10.51 மணி முதல் மதியம் 1.18 மணி வரை என பஞ்சாங்கக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சதுர்த்தி திதி செப்டம்பர் 14-ம் தேதி காலை 7.06 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 15-ம் தேதி காலை 7.44 மணிக்கு நிறைவடைகிறது.
சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள்:
தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வது, ஊர்வலம் நடத்துவது மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களிலேயே சிலைகளை கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறை சார்பிலும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிலைகளை வைக்க உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகளின் உயரம் உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் வாகனங்களிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் அல்லது சமூகங்களுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலான முழக்கங்கள் மற்றும் அரசியல் சார்ந்த பேனர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்:
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண் சிலைகளைப் பயன்படுத்தி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதும், சிலை கரைப்பின்போது நீர்நிலைகள் மாசுபடாமல் பாதுகாப்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பக்தர்கள் உற்சாகத்துடன் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் வாழ்த்து:
முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கிருந்த படியே தமிழக மக்களுக்கு தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சி.எம். விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!