கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வாக்காளர்களை அடைத்து வைக்கும் வகையில் தி.மு.க.வினர் அமைத்திருந்த கூடாரங்கள் (பட்டிகள்) 10 இடங்களில் நேற்று தேர்தல் பிரிவினரால் அகற்றப்பட்டன.
அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமாரிடம் அளித்த மனுவில், தொகுதிக்கு உட்பட்ட 40 இடங்களில் தி.மு.க.வினர் கூடாரங்கள் அமைத்து வாக்காளர்களை பாதிக்கும் வகையில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.
மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, தேர்தல் ஆணையர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் உடனடியாக ஆய்வு செய்து, கூடாரங்களை அகற்ற உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: என் போட்டோ போடாதீங்க! அன்புமணிக்கு கறார்! மீண்டும் கோர்ட் படியேறிய ராமதாஸ்!
முதல் கட்டமாக நேற்று 10 இடங்களில் உள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டன. மீதமுள்ள இடங்களில் சிலவற்றை சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகம் எனக் காட்டி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கெம்பட்டி காலனி வைசியாள் வீதியில் சுயேட்சை வேட்பாளர் ஹக்கீம் அனுமதியின்றி அமைத்திருந்த தற்காலிக தேர்தல் பணிமனை கூடாரம் பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழுவினரால் அகற்றப்பட்டது.

ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் அமைக்கப்பட்டிருந்ததால் முன்பே அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதியின்றி கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு தி.மு.க. கொடிகள், போஸ்டர்கள், காலண்டர்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்ததாக பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடியைச் சுற்றி 200 மீட்டர் தொலைவுக்குள் தேர்தல் பிரசாரப் பொருட்கள் அல்லது கூடாரங்கள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்கள் குறித்து அ.தி.மு.க. தரப்பு தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.
மீதமுள்ள கூடாரங்கள் குறித்தும் தேர்தல் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தக் கூடார அகற்றல் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மாதிரி நடத்தை விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓசூர்ல பிரசாரம் பண்ணா ஜெயிக்க முடியாது!! கலைஞர் கருணாநிதி காலத்து சென்டிமென்ட்! அஞ்சும் மு.க.ஸ்டாலின்!