தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மாநிலங்களிலும் சிக்கல் வரிசைக்கட்டி நிற்கிறது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை என தேர்தல் நடக்கவுள்ள ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் உட்கட்சி பூசல், கூட்டணி இழுபறி, தலைமை குழப்பம் ஆகியவை பிரச்சாரத்தை விட அதிகம் பேசப்படுகின்றன.
கேரளாவில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், உள் கோஷ்டி மோதல் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் “பினராயி விஜயன் மூன்றாவது முறையாக வெல்வார்” என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
கட்சி தலைமை “அவர் இப்போது காங்கிரஸில் இல்லை” என்று விளக்கம் அளித்தாலும் சர்ச்சை ஓயவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் வி.டி. சத்தீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த குழப்பம் கேரளாவில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: 60 தொகுதி நம்ம லட்சியம்! அதுல 40 நிச்சயம்!! பயங்கரமான ப்ளானுடன் தயாராகும் பாஜக!
அசாமில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா ராஜினாமா அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கௌரவ் கோகோயை முன்னிலைப்படுத்தியதால் புறக்கணிக்கப்பட்டதாகவும், அதிகார திமிர் காரணமாக ராஜினாமா செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தி நேரடியாக பேசிய பிறகு ராஜினாமாவை திரும்பப் பெற்றாலும், அங்கு புகைந்து கொண்டிருக்கும் நெருப்பு அணையவில்லை.

தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் கோருகிறது. ஆனால் திமுக “ஆட்சி அதிகாரப் பகிர்வு இல்லை” என திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோரின் பேச்சுகள் சர்ச்சையை அதிகரித்துள்ளன. சிலர் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என லாபி செய்வதாகவும் தகவல்கள் உள்ளன. டெல்லி தலைமை “கூட்டணி பற்றி வெளியில் பேச வேண்டாம்” என எச்சரித்தும் சர்ச்சை ஓயவில்லை.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெயரளவில்தான் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் தனித்து களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி எல்லா மாநிலங்களிலும் உட்கட்சி பூசல், கூட்டணி இழுபறி, தலைமை குழப்பம் ஆகியவை காங்கிரஸை பலவீனப்படுத்தியுள்ளன. மற்ற கட்சிகள் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் போது காங்கிரஸில் மட்டும் உள் சண்டை தலைவலியாக மாறியுள்ளது. இதை தீர்க்காவிட்டால் வெல்லும் வாய்ப்புள்ள மாநிலங்களும் கைநழுவி போகும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!