தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புறப்பட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வருமான வரித்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குள் தன்னை சட்டவிரோதமாக தடுத்து வைத்ததாகவும், இதனால் மக்கள் சந்திப்பு மற்றும் அரசியல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘சோதனை’ என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது திட்டமிட்ட அரசியல் தலையீடாகும் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய அரசியல் சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சட்ட அமலாக்கம் என்ற பெயரில் மிரட்டல் உண்டாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைப்புகள் அரசியல் அழுத்த கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்றும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்க முயற்சி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியும் வரல!! தேர்தல் காசும் வரல!! திமுக - காங் நிர்வாகிகள் அப்செட்!
இத்தகைய செயல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளான சுதந்திரமான இயக்கம், கருத்து தெரிவிக்கும் உரிமை மற்றும் சமமான அரசியல் போட்டியை பாதிக்கின்றன என்றும், சட்டத்தை காக்க வேண்டிய அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவது பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாகவும், ஜனநாயக குரல்களை ஒடுக்க எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும், மக்கள் சேவையையும் ஜனநாயக மதிப்புகளையும் காக்க தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் சொன்னது உண்மைதான் போலயே?! காங். பொறுப்பாளர்கள் பட்டிலயில் தவெக நிர்வாகிகள் எப்பிடி?