தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை 1-ல் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை பள்ளி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, முதற்கட்டமாக பள்ளிக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கை தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறை, உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம், மாணவர்களின் படைப்புத் திறனை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். மாநிலத்தின் கல்வித்துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் இந்தக் கொள்கை அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம்.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ எதிர்த்து, தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்து பேசினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளைப் பின்பற்றி, மாநில உரிமைகளை மீட்கும் போர்முரசு கொட்டி, வாழும் பெரியாராக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார்” என உதயநிதி உரையாற்றினார்.
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழித் திட்டம், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதிக்கும் என்றும் தி.மு.க அரசு விமர்சித்து வருகிறது. இதற்கு எதிராக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனை, “தமிழர்களின் மொழி மற்றும் இன உணர்வைப் பாதுகாக்கும் அரசியல் நடவடிக்கை” என உதயநிதி விவரித்தார்.
தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று தைரியமாக சொன்னவர் முதல்வர் ஸ்டாலின். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இதன்பின் அதனை ஒத்திசைவு பட்டியலில் சேர்த்தார்கள். இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் கல்வி மீது பல்வேறு தாக்குதல் நடந்து வருகின்றன. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான தொடக்கமாகவே தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையைப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கல்விக் கொள்கையை அரசியல் உள்நோக்கத்துடன் திணிக்க முயல்வதாகவும், தமிழ்நாடு அதனை ஏற்காது எனவும் உதயநிதி கண்டனம் தெரிவித்தார். மேலும், ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், மாணவர் நலத் திட்டங்கள் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இதனை வாரிசு அரசியல் என விமர்சித்தாலும், உதயநிதியின் பேச்சு தி.மு.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக நீதிக்காக ஸ்டாலினின் தொடர் முயற்சிகள், தந்தை பெரியாரின் புரட்சிகரக் கொள்கைகளை மீட்டெடுப்பதாக உதயநிதி உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஆஸ்பிட்டலில் இருந்தபடியே அரசுப்பணி!! அதிரடி காட்டி தெறிக்க விடும் ஸ்டாலின்!!