திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தனியார் கலைக்கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் பெயரில் விடுதி வார்டன் மீது பாலியல் ரீதியான வார்த்தைகள் பேசியதாக வழக்குப்பதிவு. கல்லூரி பொறுப்பு தாளாளர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு. புகார் கொடுத்த மாணவிகள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான PVP பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பொறியியல் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.5%) கீழ் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
மேலும் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் உணவு குறித்த தகவலைத் தெரிவிக்க செல்போன் எண்களை ஆண்கள் கல்லூரி வார்டனிடம் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, அந்த வார்டன் இரவு நேரங்களில் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவிகள் கல்லூரி பொறுப்பு தாளாளர் மற்றும் சில ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் மாணவிகளைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கடந்த 6 மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், "அனுசரித்துச் செல்லுங்கள்" என நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாதங்களாக மாணவிகள் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த மாதம் 24ம் தேதி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் கல்லூரி பொறுப்பு தாளாளர் செல்வகுமார், pvp கல்லூரி தற்காலிக தலைவர் (ACTING CHAIRMAN ), சுஷ்மிதா, கலைச்செல்வி, ராமச்சந்திரன், உதயா, பிரீத் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கடல் கடந்த காதல்..! திண்டுக்கலில் டும்... டும்..! கரம் கோர்த்த அமெரிக்க ஜோடி!”
இதனிடையே புகார் கொடுத்த மாணவி உட்பட மாணவிகளின் 30-க்கும் மேற்பட்டோர் இன்று 06.06.26 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் தற்போது கல்வி பயிலும் கல்லூரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி அலறிய கணவன்... சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற மனைவி, கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்...!