மதுரை: மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுவிழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த அவர், சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் செயல்களை ஆன்மிகம் என்று சொல்வது மலிவான அரசியல் என்று சாடினார்.
“சமூகத்தைத் துண்டாடும் சதிச் செயலில் ஈடுபடுவது ஆன்மிகம் அல்ல… அது கேடுகெட்ட மலிவான அரசியல். வன்முறையைத் தூண்டினால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள். ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாகத் தவறான தீர்ப்பு கொடுத்ததை எதிர்த்து நீதி கேட்டு கண்ணகி முழங்கிய மண் இது.
நாங்கள் வளர்ச்சி அரசியல் பேசினால், அவர்கள் வேறு வகை அரசியல் பேசுகிறார்கள். எத்தனை சூழ்ச்சி செய்தாலும் அதை முறியடிப்போம், சிதைப்போம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அந்த பாட்சா எல்லாம் பலிக்காது” என்று உறுதிபடக் கூறினார்.
இதையும் படிங்க: முழுசா தெரியாம பேசாதீங்க!! இண்டிகோ விவகாரம்! ராகுல் காந்திக்கு பாஜக அமைச்சர் வார்னிங்!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “திருப்பரங்குன்றம் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றினார்கள்… ஆனால் பிரிவினையைத் தூண்டுவது உண்மையான ஆன்மிகமா? வளர்ச்சித் திட்டங்களைச் சகித்துக்கொள்ள முடியாமல் சதி செய்கிறார்கள். எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம்.

போட்டியில் சாம்பியன் நாங்கள்தான். பாஜகவுக்கு தோதான அடிமைகள் சிக்கலாம்… புதிய அடிமைகள், பழைய அடிமைகள், பி டீம், சி டீம் உருவாகலாம்… ஆனால் இறுதியில் சாம்பியன் ஆகப் போவது நாங்கள்தான்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
முதலமைச்சரின் இந்த உரை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. மதுரையில் ஒரே நாளில் மேம்பாலம் திறப்பு, ரூ.36,660 கோடி முதலீடு, வீட்டுமனைப் பட்டா வழங்கல் என வளர்ச்சி வெடிகளைத் தொடர்ந்து, இப்போது அரசியல் எதிரிகளை நேரடியாகத் தாக்கியிருப்பது திமுகவின் தாக்குதல் அரசியல் தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: தவெக கூட்டணியில் அமமுக?! தமிழகத்தில் 4முனை போட்டி தான்!! டிடிவி ஓபன் டாக்!