கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பகண்டை கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற சுற்றுப்பயண பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தலைவருக்கு 2-வது வெற்றியை கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கியது ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தான், மக்களுக்காகவே பிறந்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் நம் தலைவர் விஜயகாந்த் என்றும், தமிழக மட்டுமின்றி உலகமே ரிஷிவந்தியம் தொகுதியில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும், ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் மக்கள் கூட்டத்தை பார்த்து ஆட்டம் கண்டுள்ளதாகவும், கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்மோடு தான் இருக்கின்றார் என் வாழ்நாள் இறுதி மூச்சு இருக்கும் வரை தொண்டர்களுக்காக அர்ப்பணிக்க போகின்றேன் எனக்கூறினார்.
அப்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் நீங்கள் நிற்க வேண்டுமென தொண்டர்கள் கோஷம் எழுப்பிய நிலையில் தலைவரின் ஆசிர்வாதம் அதுவாக இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது, தலைவரின் ஆசி அதுவாக இருந்தால் ரிஷிவந்தியம் தொகுதியை மீண்டும் முரசு வெல்லும் என்றும், இப்போது வரை கூட்டணி உறுதி செய்யப்படவில்லை, வேட்பாளர்கள் உறுதி செய்யப்படவில்லை, தொகுதிகள் உறுதி செய்யப்படவில்லை எனவே தற்போது நம்முடைய எண்ணம் முழுவதும் நம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான் என்றும் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச்சின் நிறைவின் போது, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தேமுதிகவின் மாவட்ட நிர்வாகிகள் பெயர் கூறி நன்றி தெரிவித்த போது பெயர் விடுபட்ட கள்ளக்குறிச்சி தேமுதிக மாவட்ட கழக துணைச் செயலாளர் T.K.கோவிந்தன் பெயரை மீண்டும் சொல்லி நன்றி தெரிவித்து, உடல்நிலையை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். அப்போது அருகில் நின்ற அக்கட்சியின் நிர்வாகி அவர் பெயரை ஏன் சொல்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' கேப்டனுடைய கனவு திட்டம்.. பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்..!!
திடீரென பயங்கர கோபமடைந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "எங்கிட்ட அதெல்லாம் பேசக்கூடாது கம்முனு இரு" சரிங்களா நான் அம்மா, நான் அண்ணி இல்ல அம்மா எனக்கு எல்லோரும் தான் தேவை. உனக்கு ஒருவரை பிடிக்கும் பிடிக்காது என்பதற்காக நான் யாரையும் ஒதுக்க முடியாது, ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கவா, எல்லோரும் கட்சிக்காக உழைத்தவர்கள் தானே, எல்லாருமே தலைவருக்காக உழைச்சவங்க தானே, "அப்படியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது கம்முனு இரு" புரியுதா அதுதான் முதலேயே சொன்ன உங்க கோபம்,ஈகோ எல்லாத்தையும் எடுத்து ஓரமாக வை.
நம்பள நாமே அழிச்சிட்டு இருக்கோம்னு சொல்ற புரியுதா, புரியலையா உனக்கு என்ன சொல்றேன்னு மொதல்ல புரிஞ்சுக்கோ நம்மளுடைய கோல் என்ன ? தலைவருடைய கனவு,லட்சியத்தை வென்றெடுப்பது தான்,இப்ப என்ன அவ ஒரு பேர் (T.K.கோவிந்தன் பெயரை) சொன்னாதால் குடி முழுகிவிட்டதா அவரை இன்று, நேற்று நான் பார்க்கவில்லை, தலைவர் காலம் முதல் பார்த்து வருகின்றேன். உங்களது பேச்சு எல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது என்றும், நான் ஒரு தாயாக இருந்து அனைவரையும் அனுசரிப்பேன் என்றும், ஏனென்றால் நாம் அனைவரும் தற்போது யாருக்காக இருக்கின்றோம் கேப்டனுக்காக, நானும் கேப்டனுக்காக தான் இருக்கின்றேன், என் இறுதி மூச்சு வரைக்கும் அவர்தான் எனக்கும் தலைவர், அவரது கனவில் இலட்சியத்தை வென்றெடுப்பதே நமது ஒரே குறிக்கோள் என்றும் என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி எனக்கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு ஒரே ஜெ. தான்! தம்பி போட்ட பதிவுக்கு பிரேமலதா விளக்கம்!