பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், கட்சியின் தேர்தல் திட்டங்கள், எதிர்க் கட்சிகள் மீதான விமர்சனங்கள் மற்றும் நீதித்துறை விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
சமீபத்தில் ஓ.பி.எஸ்.ஸைச் சந்தித்தது அரசியல் நோக்கம் கொண்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். "டெல்லி செல்லும் நோக்கம் அரசியலுக்குச் சம்பந்தம் இல்லை. குடும்ப விழாவில் ஓ.பி.எஸ்.ஸைச் சந்தித்தேன். கட்சியின் தலைவர் நயினார் இருக்கிறார்; தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள். நான் நட்பை மட்டுமே தொடர்கிறேன். மற்றபடி அரசியல் பேச வேண்டும் என்பதில்லை. நான் எந்தத் தலைவரையும் தவறாகப் பேச மாட்டேன்."
அவர் மேலும் கூறுகையில், செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் அவருடைய கட்சியைப் பெருமையாகப் பேசுவது சகஜம் என்றும், யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தொழிலாளர் துரோக சட்டம்" திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் - முத்தரசன் எச்சரிக்கை!
பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள நீக்கங்கள் குறித்து அவர் கூறுகையில், 80 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை இறந்து போனவர்கள், வீடு மாறியவர்கள் என வாக்காளர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என பா.ஜ.க. தரப்பில் கணக்கீடு செய்துள்ளோம். பீகாரில் 6.5 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவை நாடாளுமன்றத் தேர்தல் எல்லாம் இந்தக் வாக்காளர் கணக்கோடுதான் நடந்தது.
அதே சமயம், காங்கிரஸ் என்ன பேசுகிறார்கள், விஜய் கூட பேசினார்களா என்றெல்லாம் கவலைப்படவில்லை என்றும், மக்கள் காங்கிரஸை மொத்தமாக வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அண்ணாமலை கூறினார்.
"2016-ல் தமிழகத்தில் 60 சீட்டில் ஆரம்பித்த காங்கிரஸ், தற்போது 25 சீட்டில் இருக்கிறார்கள். 35 சீட்டு வாங்கும் அளவிற்கு காங்கிரஸ் உள்ளதா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வர வேண்டியவர்கள் வருவார்கள் என நம்புகிறேன்."
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீதான நடவடிக்கைக்குப் பின்னால் தி.மு.க. இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். "திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தளவில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கி கொண்டு இருக்கின்றனர். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் தீர்ப்பு கொடுக்கவில்லை. கண்டிப்பாக இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.
மேலும் அவர், தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மீதான ஊழல் வழக்குகள் பல நீதிமன்றங்களில் நடக்கின்றன என்றும், அந்த நீதிபதிகளை மிரட்டப் பார்க்கிறார்களா?" என்றும் கேள்வி எழுப்பினார். "ஜி.ஆர். சுவாமிநாதன் பெயரை வைத்துக்கொண்டு பிற நீதிபதிகளை மிரட்டப் பார்க்கிறார்கள்.
இறுதியாக, "தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை நோக்கிப் பயணிக்கிறோம்," என்று அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!