தி.மு.க. அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை (ED) நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அரசியல் நெருக்கடியெனச் சாடிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பா.ஜ.க.வின் முயற்சிகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்வோம் என மதுரையில் தெரிவித்தார்.
பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற 'மதசார்பின்மை' என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கே.என். நேரு மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கடிதம் எழுதியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: "தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களுள்ள நிலையில் தி.மு.க. அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது. பீகார், கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு என்ன செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தி.மு.க. ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருவதால், ED, CBI, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை வைத்து ஏதாவது செய்யலாமெனப் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் பா.ஜ.க. அரசைத் துணிச்சலாக எதிர்க்கிறோம்."
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்: முதல்வருக்கு அமித் ஷா பகிரங்க எச்சரிக்கை!
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி, அவரது குடும்ப உறுப்பினர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றபோது அவர் நடந்துகொண்ட விதத்தை நினைவு கூர்ந்தார். "இ.பி.எஸ். சம்மந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, முகத்தை மூடிக்கொண்டு சென்றவர் தானே எடப்பாடி பழனிசாமி? பழனிசாமி மகனையும் முக்கியப் புள்ளியையும் டெல்லிக்கு அழைத்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டு சென்றார். ஆனால், நாங்கள் துணிச்சலோடு தைரியத்தோடு மத்திய அரசை எதிர்க்கிறோம். தி.மு.க.வைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி எங்களை விமர்சிப்பதைப் பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்கிறார்கள். எங்களை விமர்சிக்க அவருக்குத் தகுதி, யோக்கியதை இல்லை."
"75 ஆண்டுகளில் பல சோதனைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க. அமலாக்கத்துறையோ அல்லது சி.பி.ஐ.யோ எந்த விசாரணையை மேற்கொண்டாலும் அதைச் சந்திக்கத் தயார். அதனால் எவனுக்கும், யாருக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இது போன்ற பிரச்னைகள் எங்களுக்குச் சகஜம். அடிக்க அடிக்கத்தான் பந்து உந்தும். அதுபோல வழக்கு போடப் போடத்தான் அமைச்சர்கள் உறுதியாக நிற்பார்கள். யாரும் ஓடமாட்டார்கள்." தி.மு.க. எந்த விசாரணைக்கும் அஞ்சாது என்று அவர் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய்யின் தந்தையைச் சந்தித்து திருச்சி வேலுச்சாமி பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆர்.எஸ். பாரதி, இது பா.ஜ.க.வின் குழப்ப முயற்சி என்றார். "திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்றவர் விஜய்யின் தந்தை சந்திரசேகரைச் சந்தித்துள்ளார். ஆனால், திருச்சி வேலுச்சாமி கட்சியில் இல்லை என்று செல்வப்பெருந்தகையே கூறிவிட்டார். அதனால் இல்லாதவரைப் பற்றிப் பேசத் தேவையில்லை. குடும்பத்தைப் பிரிப்பார்கள்; தமிழ்நாட்டில் கூட அப்பாவும் மகனும் இரண்டாகவும், அதிமுகவை 4 ஆகவும் பிரித்துள்ளனர். மோடி, அமித்ஷா வித்தைகளையெல்லாம் முறியடிக்கும் இயக்கம் தி.மு.க. தான்."
திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூர் கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பற்றிப் பேசிய ஆர்.எஸ். பாரதி, மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னால் தான் உள்ளனர் என்றார். "திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களும் மக்களும் முதல்வர் பின்னால் தான் உள்ளார்கள்."
சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வின் பலம் குறித்துப் பேசியபோது, "கருத்துக்கணிப்புகள் ஒன்றும் விஜய் முன்னிலை எனச் சொல்லவில்லையே. நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம். நாங்கள் 159 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளோம். பாஜக சார்பு தனியார் பத்திரிக்கை ஒன்று தி.மு.க.தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் எனச் சொன்னால், அது எங்களுக்குச் சாதகமானது என்று அர்த்தம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: "5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. மதுரைக்கு என்ன செய்தது?" - மெட்ரோ, எய்ம்ஸ் குறித்துத் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!